
ரயிலில் 2 கோடி ஹவாலா பணம் கடத்தி வந்த நபர்களை மிரட்டி பணம் பறித்த விவகாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட முதல் நிலைக் காவலர் டிஜிபியிடம் புகார் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்படாத தன்னை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக குற்றச்சாட்டியுள்ளார்.
பெரம்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 7-ம் தேதி லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் கடத்தி வந்த நான்கு பயணிகளை பிடித்து ரயில்வே இருப்புப் பாதை போலீஸார் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை வருமானவரித்துறை மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தால் பணம் கிடைக்காது என கூறி கடத்தல்காரர்களிடம் 10% கமிஷனாக கொடுத்துவிட்டு, மீதி பணத்தை எடுத்துச் செல்லுமாறு பெரம்பூர் இருப்பு பாதை காவல் நிலைய போலீஸார் பேரம் பேசிய விவகாரம் ரயில்வே டிஐஜிக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் குமார், காவலர் தினேஷ், முதல் நிலை காவலர் சுதாகர் ஆகிய நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து டிஐஜி உத்தரவிட்டார். காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர் சுதாகர் டிஜிபிக்கு பரபரப்பு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், இந்த விவகாரத்தில் எந்த வகையிலும் நான் சம்பந்தப்படவில்லை. ஆனால் டிஎஸ்பி முத்துக்குமார் மற்றும் டிஐஜி ஆகியோர் தன்னை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். மேலும் தனது பணியிடை நீக்கத்தை உடனே ரத்து செய்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக பெரம்பூர் இருப்புபாதை காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ரேணுகா முதல் நிலை காவலர் சுதாகரிடம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் எந்த வகையிலும் சம்பந்தமே படாத உன்னை இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுத்தி இருப்பதாகவும் உதவி ஆய்வாளர் ரேணுகா பேசியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.