அதானி - மம்தா சந்திப்பு... அரசியல் களத்தில் அதிர்வுகள்!

அதானி - மம்தா சந்திப்பு...
அரசியல் களத்தில் அதிர்வுகள்!

பாஜகவின் ‘பி டீம்’ எனக் காங்கிரஸ் தலைவர்களால் அர்ச்சிக்கப்படும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படும் பெருந்தொழிலதிபர் கவுதம் அதானியை நேற்று (டிச.2) இரவு சந்தித்துப் பேசியிருக்கிறார். மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தச் சந்திப்பு ஒன்றரை மணி நேரம் நீண்டிருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம், மேற்கு வங்கத்தில் நடைபெறவிருக்கும் உலகளாவிய தொழில் துறை மாநாட்டில் கலந்துகொள்வதாக அதானி உறுதியளித்திருக்கிறார். மம்தாவுடனான இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் எழுதியிருக்கிறார்.

தொழில் துறை முன்னேற்றத்தில் மம்தா தற்போது மும்முரம் காட்டிவருகிறார். தொழில் துறைக்கான குழுவை ஏற்படுத்துவதாகவும் அறிவித்திருந்தார். அவரே தலைமை வகிக்கும் அந்தக் குழுவில், அமைச்சர்களும் உயரதிகாரிகளும் அங்கம் வகிப்பார்கள் என்றும், ஒவ்வொரு மாதமும் தொழில் முதலீடு நிலவரங்களைக் கண்காணிப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தொழில் துறையினர் விரும்பும் நம்பர் 1 மாநிலமாக மேற்கு வங்கத்தை மாற்றப்போவதாகவும் சூளுரைத்திருந்தார். சமீபத்தில் மும்பை சென்றிருந்தபோது, பல தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவரது மும்பை பயணத்தின்போது மேற்கு வங்க மாநிலத்தின் தொழில் துறை உயரதிகாரிகள் உடன்வந்திருந்தனர். அதெல்லாம் சம்பிரதாயமான செய்தியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அதானியுடனான சந்திப்புதான் பரபரப்பாகியிருக்கிறது.

குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்களுக்கு வலைவீசிக் கவர்ந்திழுத்துவரும் திரிணமூல் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள், இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி குறித்து கிண்டலாகப் பேசியிருந்தார் மம்தா. அதுகுறித்து, காங்கிரஸ் தலைமை வாய் திறக்கவில்லை என்றாலும், 2-ம் கட்டத் தலைவர்களும் நிர்வாகிகளும் மம்தாவை விளாசித் தள்ளுகிறார்கள்.

அத்துடன், மம்தாவின் தேர்தல் வியூக வகுப்பாளரும், காங்கிரஸிலிருந்து பல தலைகளை திரிணமூல் காங்கிரஸுக்கு மடைமாற்றி வருபவருமான பிரசாந்த் கிஷோர் நேற்று, காங்கிரஸ் தலைமை குறித்தும் ராகுல் காந்தி குறித்தும் பரபரப்பாக ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில், மம்தா - அதானி சந்திப்பு குறித்து இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.ஸ்ரீநிவாஸ், “பி.கே அண்ணா! சேட் ஜி (அதானி) குறைந்தபட்சம் வேறு யாரையேனும் தேடிச் சென்றிருக்கலாமே?” என்று ட்விட்டரில் கிண்டல் செய்திருக்கிறார். அத்துடன், “கடந்த ஓராண்டு நிலவரத்தை வைத்துப் பார்க்கும்போது தேர்தல்களின் அடிப்படையில் ராகுல் காந்தி தோல்வியடைந்துவிட்டார் எனச் சொல்வதை ஏற்க முடியாது” என சில மாதங்களுக்கு முன்னர் பிரசாந்த் கிஷோர் பேசும் காணொலியையும் பதிவிட்டு, “பி.கே-வுக்கு எதிராக பி.கே” என்றும் ஸ்ரீநிவாஸ் கேலி செய்திருக்கிறார்.

மறுபுறம், மும்பை சென்றிருந்தபோது, அமர்ந்துகொண்டே தேசிய கீதம் பாடியதாகவும், அதையும் பாதிவரைக்கும்தான் பாடினார் என்றும் கொந்தளித்த பாஜகவினர், அதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறார்கள். தேசிய கீதத்தைப் பாட ஆரம்பிக்கும்போது அமர்ந்திருந்த மம்தா, உடனடியாக எழுந்துநின்றுதான் தொடர்ந்து பாடினார். ஆனால், பாதியில் நிறுத்திவிட்டார்.

ஒருபக்கம் பாஜக, இன்னொரு பக்கம் காங்கிரஸ் என்று இரு பெரும் தேசியக் கட்சிகளையும் சீண்டிவிட்டபடி, தன்போக்கில் அதிரடிகளைத் தொடர்கிறார் மம்தா. மேற்கு வங்கத்துக்கு வெளியே, பிற மாநிலங்களிலும், தேசிய அரசியலிலும் தடம் பதிப்பதில் மும்முரமாக இருக்கும் மம்தா, அடுத்து என்ன அதிரடியில் இறங்குவார் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in