‘மோடியின் பெயரை அகற்றுவோம்!’ - குஜராத் தேர்தலில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

‘மோடியின் பெயரை அகற்றுவோம்!’ - குஜராத் தேர்தலில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால், அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்துக்கு வைக்கப்பட்டிருக்கும் பிரதமர் மோடியின் பெயர் அகற்றப்பட்டு, சர்தார் வல்லபாய் படேலின் பெயர் வைக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது காங்கிரஸ்.

டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படவிருக்கிறது. டிசம்பர் 8-ல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில், ஆளுங்கட்சியான பாஜகவுக்குக் கடும் சவால் விடும் வகையில் ஆம் ஆத்மி கட்சி பரபரப்பான அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் வழங்கிவருகிறது. 2017 தேர்தலில் பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சியும், இந்தத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், அக்கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. அகமதாபாதில் நடந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கையில் பல முக்கியமான வாக்குறுதிகள் இடம்பெற்றிருக்கின்றன.

10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு, ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் தலா 2,000 ரூபாய் ரொக்கம், 3 லட்சம் ரூபாய் வரை விவசாயக் கடன் தள்ளுபடி, 3,000 ஆங்கிலவழிப் பள்ளிகள், முதுகலைப் பட்டப் படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி, 300 யுனிட் இலவச மின்சாரம், வேலைவாய்ப்பு கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகை, 500 ரூபாய்க்கு கியாஸ் சிலிண்டர் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வழங்கியிருக்கிறது.

கூடவே, அகமதாபாதில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் வைக்கப்பட்ட பிரம்மாண்டமான கிரிக்கெட் மைதானத்தின் பெயர் மாற்றப்பட்டு, சர்தார் வல்லபாய் படேலின் பெயர் வைக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருக்கிறது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், பாஜக ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல்கள் குறித்த புகார்களை விசாரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அசோக் கெலாட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in