ஒருவழியாக அறிவிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதி!

காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இன்று ஏகமனதாக முடிவுசெய்யப்பட்டது
ஒருவழியாக அறிவிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதி!

தொடர்ந்து தேர்தல் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சி, சமீபகாலமாக உட்கட்சிப் பிரச்சினைகள் காரணமாகக் கடும் நெருக்கடியையும் எதிர்கொண்டுவருகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார், மூத்த தலைவரும் புகழ்பெற்ற வழக்கறிஞருமான கபில் சிபல், கட்சியின் செய்தித்தொடர்பாளரான ஜெய்வீர் ஷெர்கில் என அடுத்தடுத்து தலைவர்கள் காங்கிரஸிலிருந்து விலகிய நிலையில், மேலும் ஓர் அதிர்ச்சியாக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், ஆகஸ்ட் 26-ல் கட்சியிலிருந்து விலகினார்.

கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருந்த கடிதத்தில் - ராகுல் காந்தி முதிர்ச்சித் தன்மையற்றவர்; 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்குக் கிடைத்த படுதோல்விக்கு ராகுல் காந்தியின் முதிர்ச்சியற்ற தன்மைதான் காரணம்; முக்கியமான எல்லா முடிவுகளும் ராகுல் காந்தி அல்லது அவரது பாதுகாவலர்கள் மற்றும் உதவியாளர்களால்தான் எடுக்கப்படுகின்றன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை குலாம் நபி ஆசாத் முன்வைத்திருந்தார்.

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சிக்குள் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும், உட்கட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும், நிரந்தரத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கட்சித் தலைமையை வலியுறுத்தி சோனியா காந்திக்குப் பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தனர் ஜி-23 தலைவர்கள். குலாம் நபி ஆசாத் தான் அந்தக் குழுவுக்குத் தலைவர் போலச் செயல்பட்டுவந்தார்.

5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த படுதோல்வியைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் அதிருப்தித் தலைவர்களான ஜி-23 தலைவர்கள் கட்சித் தலைமை குறித்து மீண்டும் விமர்சிக்கத் தொடங்கினர். கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி முன்வராதது ஒருபக்கம், உட்கட்சித் தேர்தல், கட்சித் தலைவருக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாதது இன்னொரு பக்கம் எனத் தொடர்ந்து குழப்பங்கள் நிலவின.

செப்டம்பர் 20-ம் தேதிக்குள் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தேர்தலுக்கான தேதி இறுதிசெய்யப்படுவதில் தாமதம் நீடித்துக்கொண்டே இருந்தது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. சோனியா காந்தி தற்போது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருக்கிறார். இன்று மதியம் 3.30 மணிக்குத் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் அவர் காணொலி மூலம் கலந்துகொண்டார். அவருடன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்துகொண்டனர். கே.சி.வேணுகோபால், ஜி-23 தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜெய்ராம் ரமேஷ், ப.சிதம்பரம், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கட்சித் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 22-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24-ல் தொடங்கும். வேட்புமனுத் தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள். அக்டோபர் 19-ம் தேதி, வாக்குகள் எண்ணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் தேதி ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in