‘காங்கிரஸின் கதை முடிந்தது; சோனியாவைப் பிரதமராக்க பாஜக விரும்புகிறது!’

அர்விந்த் கேஜ்ரிவால் அதிரடி
‘காங்கிரஸின் கதை முடிந்தது; சோனியாவைப் பிரதமராக்க பாஜக விரும்புகிறது!’

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “காங்கிரஸின் கதை முடிந்துவிட்டது” எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின்னர் மிகுந்த தன்னம்பிக்கை பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சி, குஜராத்தில் பாஜகவை வீழ்த்தி அரியணை ஏறப்போவதாக சூளுரைத்திருக்கிறது. டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக அம்மாநிலத்துக்கு அடிக்கடி சென்றுவருகிறார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக அகமதாபாத் சென்றிருக்கும் கேஜ்ரிவால், இன்று நகர்மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு, ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூட பணம் இல்லாமல் திவால் நிலையை எட்டும் சூழலில் இருக்கிறது. ஆனால், குஜராத் தேர்தலுக்காகப் பல கோடி ரூபாய் விளம்பரச் செலவு செய்கிறது’ எனக் குற்றம்சாட்டு எழுந்திருப்பதாக ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

“அப்படி கேட்டது யார்?” எனக் கேஜ்ரிவால் கேட்டார். ‘காங்கிரஸ் கட்சியினர்தான் அந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள்’ என பதில் வந்தது. உடனே, “காங்கிரஸின் கதை முடிந்தது. அவர்கள் எழுப்பும் கேள்விகளையெல்லாம் பொருட்படுத்தாதீர்கள். மக்கள் இதில் தெளிவாக இருக்கிறார்கள். காங்கிரஸாரின் கேள்விகளை யாருமே பொருட்படுத்துவதில்லை” என்றார் கேஜ்ரிவால்.

2017 குஜராத் தேர்தலில், மொத்தம் உள்ள 182 இடங்களில் பாஜக 99 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. எனினும் கணிசமான இடங்களைக் காங்கிரஸிடம் இழந்தது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது. இந்த முறை பாஜக, காங்கிரஸ் என இரண்டு பிரதான கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என ஆம் ஆத்மி கட்சி நம்பிக்கையுடன் பேசிவருகிறது.

“குஜராத்தில் பாஜக ஆட்சி நீடிக்கக் கூடாது என்று நினைக்கும் மக்கள், காங்கிரஸுக்கு வாக்களிக்கவும் விரும்பவில்லை. பாஜகவுக்கு நாம்தான் ஒரே மாற்று என்பதால் அவர்களின் வாக்குகளைப் பெற வேலை செய்ய வேண்டும்” என்று தனது கட்சியினர் மத்தியில் பேசுகையில் கேஜ்ரிவால் வலியுறுத்தினார்.

‘சமூகச் செயற்பாட்டாளர் மேதா பட்கரை குஜராத்தின் அடுத்த முதல்வராகக் கொண்டுவர கேஜ்ரிவால் விரும்புகிறார்’ என பாஜக கூறியிருப்பது குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த கேஜ்ரிவால், “மோடிக்குப் பிறகு சோனியா காந்தியைப் பிரதமராக்க பாஜக திட்டமிடுகிறது என நான் சொன்னதாக அவர்களிடம் சொல்லுங்கள். அதற்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்க்கலாம்!” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in