உச்சகட்டத்தில் உட்கட்சிக் குழப்பங்கள்! கரை சேருமா காங்கிரஸ்?


உச்சகட்டத்தில் உட்கட்சிக் குழப்பங்கள்!
கரை சேருமா காங்கிரஸ்?

காங்கிரஸில் அவ்வப்போது வீசிவந்த சூறாவளிகள் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தப் புயலாக மாறியிருக்கின்றன. ஒருபுறம், இளம் தலைவர்கள் காங்கிரஸுக்குள் காலடி எடுத்துவைக்கின்றனர். மறுபுறம் கேப்டன் அமரீந்தர் சிங், லூசினோ ஃபெலேரோ, உத்தர பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவர் கயாதீன் அனுராகி போன்ற மூத்த தலைவர்கள் கசப்புடன் கட்சியைவிட்டு வெளியேறுகின்றனர்.

இன்னொரு புறம், கட்சிக் குழப்பங்களுக்குத் தீர்வுகோரி தலைமையிடம் வலியுறுத்தும் கபில் சிபல் போன்ற தலைவர்கள் காங்கிரஸ் தொண்டர்களின் கடுங்கோபத்துக்கு இலக்காகிறார்கள். கபில் சிபல் வீட்டுக்கு முன்னால் திரண்டு போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் யாருடைய மனவோட்டத்தை எதிரொலித்தனர் என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது. இந்த நிகழ்வுகளால் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

உள்ளே வெளியே விளையாட்டு

காங்கிரஸில் கடந்த சில காலமாகவே பெரிய அளவில் உள்ளே வெளியே விளையாட்டு நடந்துகொண்டிருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து கன்னையா குமார் காங்கிரஸில் சேர்கிறார் என்றால், கோவா முன்னாள் முதல்வர் லூசினோ ஃபெலேரோ காங்கிரஸிலிருந்து வெளியேறி திரிணமூல் காங்கிரஸில் இணைகிறார். கட்சித் தலைமையால் அவமதிக்கப்பட்டதாக அமரீந்தர் சிங் வேதனையுடன் சொன்னதுபோலவே, லூசினோ ஃபெலேரோவும் கசப்பை வெளிகாட்டியிருக்கிறார். உத்தர பிரதேச காங்கிரஸிலிருந்து சமாஜ்வாதி கட்சிக்குத் தாவியிருக்கும் கயாதீன் அனுராகி, தன்னைப் போன்ற மூத்த தலைவர்களுக்குக் கட்சியில் மதிப்பில்லை என்று கூறியிருக்கிறார். இன்னொருபுறம் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் எனும் நிலை.

அடுத்த ஆண்டு பஞ்சாப், கோவா, உத்தர பிரதேச மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் காத்திருக்கும் சூழலில், இன்னும் இரண்டு ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலும் நடக்கவிருக்கும் சூழலில் காங்கிரஸ் இப்படியான பெரும் புயலில் சிக்கியிருக்கிறது. காங்கிரஸில் சேர்ந்திருக்கும் கன்னையா குமார், அக்கட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான கிடுக்குப்பிடி கேள்விகளுக்கு நெத்தியடி பதில் தரக்கூடியவர் என்பதால், அது ஒரு சாதகமான அம்சம் என்றே சொல்லலாம். குஜராத்தின் மிக முக்கியப் பட்டியலினத் தலைவராக வளர்ந்திருக்கும் ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரஸில் சேரவிருப்பது கூடுதல் பலம்தான். ஆனால், சொல்லிக்கொள்ளும் வகையில் இருக்கும் சாதக அம்சங்கள் இவை மட்டும்தான். மற்றபடி, நடக்கும் எல்லா விஷயங்களும் காங்கிரஸின் எதிர்காலத்துக்கு உலைவைக்கும் விதமாகவே இருக்கின்றன.

அமித்ஷா - அமரீந்தர் சிங்
அமித்ஷா - அமரீந்தர் சிங்

பஞ்சாப் பாடம்

“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது நாட்டின் ஒற்றுமையைச் சிதைத்துவிடும்” என்று 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகப் பேசிய அமரீந்தர் சிங், பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் டெல்லிக்குச் சென்று அமித் ஷாவைச் சந்தித்த அமரீந்தர் அப்படியான எதிர்பார்ப்பை எகிறவைக்கவே செய்தார். பின்னர், விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக அமித் ஷாவிடம் பேசியதாக விளக்கம் சொன்னார் அவர். விரைவில் அமரீந்தர் புதிய கட்சியைத் தொடங்கலாம் என்றும், அதில் பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் பலர் இணையலாம் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. பாஜகவுக்குப் பெரும் பாதிப்பையும், காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பையும் தரும் என்று எதிர்பார்க்கப்பட்ட விவசாயிகள் போராட்டத்தின் விளைச்சலை அமரீந்தர் சிங் அறுவடை செய்வார் என்றும் செய்திகள் பரபரக்கின்றன.

கட்சிக்கு முழு நேரத் தலைவர் வேண்டும்; உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும் என்று கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதியதால் ‘ஜி-23’ குழுவினர் என்று அழைக்கப்படும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள், இந்த நிகழ்வுகளால் மேலும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.

கபில் சிபல் வீட்டின் முன்பு
கபில் சிபல் வீட்டின் முன்பு

ஜி-23 தலைவர்கள் பட்டியலில் அடங்காத இன்னொரு மூத்த தலைவரான ப.சிதம்பரம், கபில் சிபல் இல்லம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் நடத்திய போராட்டத்தைக் கண்டித்திருப்பது மிக முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. தனிக்கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படும் அமரீந்தர் சிங், ஜி-23 தலைவர்களுடனும் பேசவிருப்பதாகக் கூறியிருக்கிறார். தனது முதல்வர் பதவிக்குக் குண்டுவைத்த நவ்ஜோத் சிங் சித்துவைத் தேர்தலில் வீழ்த்தியே தீருவது என்று கேப்டன் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார். இன்னொரு புறம், காங்கிரஸின் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான நட்வர் சிங், “மோடிக்குச் சவால் விடும் வகையில் காங்கிரஸில் யாருமே இல்லை. ராகுல் காந்தியெல்லாம் மோடிக்கு எதிராக நிற்க முடியாதவர். வேண்டுமானால் மோடிக்கும் ராகுலுக்கும் இடையில் விவாதம் நடத்திப்பாருங்கள்” என்று செமத்தியாக வாரியிருக்கிறார். இந்தியா முழுவதும் காங்கிரஸின் அடித்தளம் கரைந்துகொண்டே வருவதற்கு, சோனியா காந்தி குடும்பம்தான் காரணம் என்றும் அவர் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார்.

சந்தோஷத்தில் பாஜக

நடப்பனவற்றையெல்லாம் புன்னகையுடன் ரசித்துக்கொண்டிருக்கிறது பாஜக. காங்கிரஸ் தலைமையுடன் கட்சிப் பெருந்தலைகள் மோதிக்கொண்டிருப்பது அக்கட்சியின் வெற்றிவாய்ப்புகளைக் குலைக்கும் என்பதை பாஜக நன்கு கண்டுகொண்டிருக்கிறது. கூடவே, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தங்கள் வெற்றி எல்லையை விரிவுபடுத்தும் வேலைகளில் இறங்கியிருப்பது காங்கிரஸுக்கு மேலும் போட்டிச் சூழலை உருவாக்கும் என்பது பாஜகவின் கணக்கு.

மறுபுறம், இந்த விவகாரங்களையெல்லாம் காங்கிரஸ் தலைமை எப்படி எடுத்துக்கொள்கிறது என்றே பலருக்கும் புரியவில்லை. பாஜக தலைவர்களுடனான அமரீந்தரின் நெருக்கம் அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் கூறியிருப்பது வியப்பைத் தருகிறது. இன்னொரு புறம், பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து பேசிவரும் ராகுல் காந்தி, சொந்தக் கட்சி விவகாரங்கள் குறித்து ஊடகங்களிடம் வாய் திறப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கிறார்.

இந்தச் சூழலில், சோனியா காந்தியின் செயல்பாடுகளில் இருக்கும் சுணக்கம், கட்சியைக் காவுவாங்கிவிடும் என்றே கருதப்படுகிறது. கட்சித் தலைமைப் பொறுப்பை உதறிவிட்டுச் சென்ற ராகுல் காந்தி, மாநில விவகாரங்களில் மட்டும் நேரடியாகத் தலையிட்டு முடிவெடுக்கிறார். பிரியங்கா காந்தியும் தன் பங்குக்குக் குட்டையைக் குழப்புகிறார். சத்தீஸ்கர் முதல்வர் பதவிக்குக் குறிவைத்துக் காய்நகர்த்தும் டி.எஸ்.சிங் தேவுக்கு ராகுலின் ஆதரவு இருக்கிறது என்றால், பஞ்சாப் விவகாரத்தில் சித்துவுக்குப் பிரியங்காவின் ஆதரவு இருந்தது. தனது நம்பிக்கைக்குரிய ஆலோசகராக இருந்த அகமது படேலின் மறைவுக்குப் பின்னர், தன் வாரிசுகளின் ஆலோசனைகளைத் தான் சோனியா காந்தி நம்பியிருக்கிறார். ஆனால், வாரிசுகள் இருவரும் வம்பைத்தான் அதிகம் வளர்த்தெடுக்கின்றனர்.

கபில் சிபல் - குலாம் நபி ஆசாத்
கபில் சிபல் - குலாம் நபி ஆசாத்

இனி என்ன?

கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்ற மூத்த தலைவர்கள் வலியுறுத்தியிருக்கும் நிலையில், விரைவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரும், தலைமைச் செய்தித் தொடர்பாளருமான ரண்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியிருக்கிறார். அதேவேளையில், அந்தக் கூட்டத்தில், தலைமைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தலைவர்களுக்கு கல்தா கொடுப்பது பற்றியும் முடிவெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

பாஜக ஆளும் மாநிலங்களிலும்தான் முதல்வர்கள் அதிரடியாக மாற்றப்படுகின்றனர். ஆனால், அதுபற்றியெல்லாம் இந்த அளவுக்கு விவாதம் எழுவதில்லையே என்று காங்கிரஸ் தலைவர்கள் சமாதானம் சொல்லலாம். உண்மையில், மோடி - அமித் ஷா ஜோடி எடுக்கும் முடிவுகள், கட்சி அளவில் பெரிய சலசலப்பை ஏற்படுத்துவதில்லை. சலசலப்புகள் எழுந்தாலும் உடனடியாக அவை முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்றன. அதற்கு வலுவான தலைமைப் பண்புதான் பாஜகவுக்குக் கைகொடுக்கிறது. காங்கிரஸ் தலைமை அப்படி வலுவாக இருக்கிறதா என்பதுதான் கதர்ச்சட்டைக்காரர்கள் விடை தேட வேண்டிய முக்கியக் கேள்வி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in