கொடியேற்ற சங்கடங்கள்: அன்று அமித் ஷா, இன்று சோனியா!

கொடியேற்ற சங்கடங்கள்: அன்று அமித் ஷா, இன்று சோனியா!

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 137-வது ஆண்டுவிழா, டெல்லியில் அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (டிச.28) நடந்தது. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அந்த விழாவில், கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, கட்சிக் கொடியை ஏற்றிய தருணத்தில் அது உடனடியாகக் கழன்று அவர் கையில் விழுந்ததுதான் இன்று பேசுபொருளாகியிருக்கிறது.

கொடி அவிழ்ந்து சோனியா காந்தியின் கையில் வீழ்ந்ததும், காங்கிரஸ் பொருளாளர் பவன் பன்ஸால், பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இணைந்து கொடியை உயர்த்திக் காட்டினர். பின்னர் மீண்டும் கொடிக் கம்பம் சரிசெய்யப்பட்டு கட்சிக் கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.

என்னதான் சமாளிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இந்த நிகழ்வு சமூகவலைதளங்களில் வைரலாகிவிட்டது. 2022-ல் பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சிக்கு இது நல்ல சகுனமா என்கிற ரீதியில் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுகிறது.

கொடியேற்றும் தருணங்களில் இப்படியான சங்கடங்கள் நேர்வது புதிதல்ல. 2018 சுதந்திரதின விழாவை, பாஜக தலைமையகத்தில் கொண்டாடிய கட்சியின் அப்போதைய தலைவர் அமித் ஷா, தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது தேசியக் கொடி நேராக அவர் கையில் வந்து விழுந்தது. எனினும் சுதாரித்துக்கொண்டு மீண்டும் கொடியை அவர் ஏற்றினார்.

இந்த நிகழ்வையொட்டி பாஜகவைக் கடுமையாகக் கிண்டல் செயதது காங்கிரஸ். “நாட்டின் தேசியக் கொடியைச் சரியாகக் கையாளத் தெரியாதவர்கள், நாட்டை எப்படிக் காப்பார்கள்?” என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அமித் ஷா கொடியேற்றிய காட்சியையும் காணொலிப் பதிவாக அதில் இணைத்திருந்தது காங்கிரஸ்.

எனினும், அடுத்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவே மீண்டும் வென்று ஆட்சியமைத்தது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.