குலாம் நபியைத் தொடர்ந்து கூண்டோடு வெளியேறும் காஷ்மீர் நிர்வாகிகள்: காங்கிரஸுக்குப் புதிய சிக்கல்!

குலாம் நபியைத் தொடர்ந்து கூண்டோடு வெளியேறும் காஷ்மீர் நிர்வாகிகள்: காங்கிரஸுக்குப் புதிய சிக்கல்!

காங்கிரஸ் மூத்த தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த நிர்வாகிகளும் கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறார்கள். இது காஷ்மீர் காங்கிரஸை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரத் தலைமை தேவை என வலியுறுத்தி சோனியா காந்திக்கு பகிரங்கக் கடிதம் எழுதிய ஜி-23 தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், பல்வேறு தருணங்களில் கட்சித் தலைமையுடன் மோதிவந்த நிலையில், சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும் வெளியேறினார். ராகுல் காந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்திருந்தார்.

அடுத்து பாஜகவில் இணைவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், காஷ்மீர் காங்கிரஸைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் குலாம் நபியைப் பின்பற்றி கூண்டோடு வெளியேறுவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. காஷ்மீர் முன்னாள் சபாநாயகர் உட்பட 4 முக்கியத் தலைவர்கள் நேற்றே கட்சிப் பதவிகளிலிருந்து வெளியேறினர்.

இதைத் தொடர்ந்து, காஷ்மீர் முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எனப் பலரும் கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்திருக்கிறார்கள்.

“காங்கிரஸிலிருந்து விலகி குலாம் நபி சாஹேபுடன் இணைகிறேன்” என என்டிடிவி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தாரா சந்த் கூறியிருக்கிறார். மேலும் பலர் கட்சியிலிருந்து வெளியேறுவார்கள் எனத் தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கைப் போல குலாம் நபி ஆசாதும் புதிய கட்சியைத் தொடங்கி தேர்தலில் தோல்வியடைவார் என ஏறத்தாழ சாபம் இட்டிருக்கிறது. “காங்கிரஸைவிட்டு வெளியேறியவர்களைக் கட்சியிலிருந்து வெளியேறிய கசடுகளாகவே கருதுகிறோம். இனி புதிய பார்வையுடன் புதிய முகங்களைக் கட்சிக்குள் கொண்டுவருவோம்” என்று காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் தெரிவித்திருக்கிறார்.

எனினும், ‘கேப்டன் அமரீந்தர் சிங் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டபோது அவருடன் வெகு சில தலைவர்கள்தான் வெளியேறினர். ஆனால், குலாம் நபி ஆசாத் ஏறத்தாழ காங்கிரஸ் கட்சியினர் அனைவரையும் தன்னுடன் அழைத்துச்செல்கிறார்’ என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். கட்சியின் 95 சதவீதத் தொண்டர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் தன்னுடன் இணைன்ந்திருப்பதாக குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, புதிய கட்சி தொடங்கினாலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என குலாம் நபி ஆசாத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக, என்டிடிவி செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த அவர், “காஷ்மீரின் அரிச்சுவடி தெரிந்தவர்கள், நான் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அது எனக்கோ பாஜகவுக்கோ பலன் தராது என்பதை உணர்ந்திருப்பார்கள். பாஜகவின் வாக்குவங்கி வேறு. எனது வாக்குவங்கி வேறு” எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in