கல்வித்துறையை எதிர்த்து போராட்டம்: காங்கிரஸ் திடீர் அறிவிப்பு

செய்தியாளர்களை சந்திக்கும் கமலக்கண்ணன்
செய்தியாளர்களை சந்திக்கும் கமலக்கண்ணன்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியிட மாறுதலை ரத்து செய்யாவிட்டால் கல்வித்துறையை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காரைக்காலில் இருந்து   அரசு தொடக்கப்பள்ளி  ஆசிரியர்கள் 124 பேர் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கு பதிலாக  புதுச்சேரியில் இருந்து 90 பேர் காரைக்காலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் ஏற்கெனவே தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் தற்போது மேலும் 34 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருக்கும் என்பதால் இதற்கு காரைக்கால் மாவட்டத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தப் பணியிட மாறுதலை  ரத்து செய்ய வேண்டும் காலிப் பணியிடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் கண்டன குரல் எழுப்பி வருகின்றன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும்  தலையிட்டிருக்கிறது.

மாறுதல் ஆணையை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சந்திரமோகன் தலைமையில் காங்கிர கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள  புதுச்சேரி கல்வித்துறை இயக்குநரிடம் நேரில் வலியுறுத்தினர்.

அதன்பின்னர் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,  'புதுச்சேரி மாநிலத்தில்  பல அரசு துறைகள் செயலற்று போயிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கல்வித்துறை  மாணவர்களையும் பெற்றோர்களையும் வஞ்சித் வருகிறது. கடந்த இரண்டு மாதமாக காங்கிரஸ் கட்சியினர் காரைக்காலில் மாணவர்களுக்கு  இலவச பேருந்துகள்  விட  வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்திய பின்புதான் பள்ளிகள் தொடங்கி 150 நாட்களுக்குப் பிறகு அரசு  மாணவர்களுக்கு இலவச பேருந்துகளை இயக்கியிருக்கிறது.

தற்போது காரைக்காலில் தொடக்கப் பள்ளிகளிலும்,  மேல்நிலைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்நிலையில் 124 தொடக்க பள்ளி ஆசிரியர்களை காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு கல்வித்துறை மாற்றலாக ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு பதிலாக 90 ஆசிரியர்களை காரைக்கால் பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. 

ஏறத்தாழ மாற்றலாகும் ஆசிரியர்களில் இருந்து 30 ஆசிரியர்களை குறைத்து 90 ஆசிரியர்களை காரைக்காலுக்கு அனுப்பிவைக்க ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கல்வியின்  தரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும். குறிப்பாக கிராமப் பள்ளி மாணவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். பொதுவாக கல்வியாண்டின் இறுதியில் தான் ஆசிரியர்கள் மாற்றலாக ஆணை பிறப்பிப்பது மரபு.

ஆனால் இப்படி இடையிலேயே மாற்றுவதால் மாணவர்களின் கல்வித் தரம் கண்டிப்பாக பாதிக்கும்.   எனவே இந்த ஆசிரியர்கள் இடமாற்ற ஆணையை உடனே கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும், அப்படி  ரத்து செய்யாவிட்டால்  காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர்களின் கல்வி நலனுக்காக மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்' என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in