‘இன்னொரு கோஷ்டியை காங்கிரஸ் தாங்காது!’ - சசி தரூர் விளக்கம்

‘இன்னொரு கோஷ்டியை காங்கிரஸ் தாங்காது!’ - சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டதைத் தொடர்ந்து, கட்சிக்குள் விமர்சனக் கணைகளை எதிர்கொண்டுவரும் சசி தரூர் எம்.பி, காங்கிரஸில் இன்னொரு குழுவை உருவாக்கும் எண்ணமில்லை என்று கூறியிருக்கிறார்.

அக்டோபர் 17-ல் நடந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மல்லிகார்ஜுன கார்கேயிடம் தோல்வியடைந்தார் சசி தரூர். பதிவான 9,835 வாக்குகளில் சசி தரூருக்கு ஆதரவாக 1,072 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.

இந்தத் தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா குடும்பத்தினர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நிலையில், சசி தரூர் போட்டியிட்டதால் அவர் மீது காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். போதாக்குறைக்கு, மாநில காங்கிரஸ் தலைமையின் அனுமதி பெறாமல் மலபார் அரசியல் சுற்றுப்பயணம் எனும் பெயரில், கோழிக்கோடு, மலப்புரம், கன்னூர் மாவட்டங்களில் அவர் மேற்கொண்டிருக்கும் பயணம் அவர் மீதான விமர்சனங்களை மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், இன்று மலப்புரம் மாவட்டம் பணக்காடு நகரில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் சையத் சதிகலி ஷிஹாப் தங்கலின் வீட்டுக்குச் சென்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனது பயணம் கட்சிப் பிரிவினைக்கு வழிவகுக்கும் எனச் சிலர் கூறுகிறார்கள். இன்னொரு குழுவை உருவாக்கும் எண்ணம் எதுவும் எனக்குக் கிடையாது. கட்சியில் மேலும் குழுக்களுக்கான தேவை இல்லை. காங்கிரஸின் பெயருடன் ஒரு எழுத்து சேர்க்கப்பட வேண்டும் என்றால் அது ‘யு’ (யுனைட்டட் - ஒருங்கிணைந்த) காங்கிரஸாகத்தான் இருக்க வேண்டும்” என்றார்.

கேரளத்தைச் சேர்ந்த மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி, கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாட்டால் 1980-ல் காங்கிரஸ் (ஏ) எனும் கட்சியைத் தொடங்கினார். எனினும், இரண்டே ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியுடன் அதை இணைத்தார். அதைச் சுட்டிக்காட்டியே இவ்வாறு சசி தரூர் பேசியது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in