'துல்லியத் தாக்குதல்’: ஆதாரம் கேட்டு சேதாரமான காங்கிரஸ்!

'துல்லியத் தாக்குதல்’: ஆதாரம் கேட்டு சேதாரமான காங்கிரஸ்!

பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியதுக்கு ஆதாரம் எங்கே என்று கேள்வி எழுப்பியதில் காங்கிரஸ் கட்சி சேதாரம் கண்டிருக்கிறது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை தற்போது ஜம்முவில் நிலை கொண்டிருக்கிறது. 130வது நாளாக தொடரும் பாத யாத்திரையின் அங்கமாக, நேற்றைய தினம் அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பாதயாத்திரை மையம் கொண்டிருக்கும் ஜம்மு-காஷ்மீரை உள்ளடக்கி, பாஜகவுக்கும் அதன் தலைமையிலான மத்திய அரசுக்கும் திக்விஜய் சிங் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெற்றபோது அரசு வழங்கிய உத்திரவாதங்களுக்கு மாறாக, பிராந்தியத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் அப்பாவி மக்கள் இப்போதும் கொல்லப்படுவதாக திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். பின்னர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளான புல்வாமா மற்றும் உரி சம்பவங்களை முன்வைத்தும் பாஜக அரசை சாடினார்.

2016ம் ஆண்டு செப்.18ல் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் உரி ராணுவ தளம் தாக்கப்பட்டதும், இந்திய வீரர்கள் 19 பேர் கொல்லப்பட்டதும் நடந்தது. இதற்கு பதிலடியாக 10 நாட்கள் கழித்து, இந்திய துருப்புகள் பாக் எல்லைக்குள் புகுந்து துல்லியத் தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்த ‘துல்லியத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் எதையும் பாஜக அரசு நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவில்லை’ என்று திக்விஜய் சிங் தற்போது சர்ச்சை கூட்டி உள்ளார். இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு, ‘ராணுவ நடவடிக்கை தொடர்பான ரகசிய தகவல்களை பொதுவில் பகிர்வது, தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக அமைந்துவிடும்’ என மத்திய அரசு மறுத்து வந்தது.

திக்விஜய் பேச்சுக்கு பாஜகவினர் மட்டுமன்றி, இந்திய ராணுவத்தின் முன்னாள் உயரதிகாரிகள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். ’பாஜக மீதான காழ்ப்புணர்ச்சியில் தேசத்தின் பாதுகாப்பு படைகளை காங்கிரஸ் சந்தேகம் கொண்டிருக்கிறது. இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபோடும் அக்கட்சியினரின் சுயரூபம் வெளிப்பட்டு விட்டது’ என்று பாஜகவினர் குமுறினார்கள். இந்த ’உரி’ வரிசையில் ’புல்வாமா’ சம்பவம் குறித்தும் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பினார்.

2019 பிப்ரவரியில், புல்வாமா என்ற இடத்தில் பாக் பயங்கவாதிகளின் வெடிமருந்து நிரப்பிய வாகன மோதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானார்கள். இந்த கோர சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு வளையத்தில் அலட்சியம் காட்டியதாகவும், வீரர்கள் விமானம் மூலம் டெல்லி கொண்டுசெல்லப்படுவதற்கு பிரதமர் மோடி அனுமதி மறுத்ததாகவும் திக்விஜய் சிங் குற்றம்சாட்டினார். இந்த புல்வாமா சம்பவத்துக்கு பழிவாங்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலக்கோட் பகுதியில் செயல்பட்ட பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திக்விஜய் சிங் - ஜெய்ராம் ரமேஷ்
திக்விஜய் சிங் - ஜெய்ராம் ரமேஷ்

உரி, புல்வாமா என 2 பயங்கரவாத தாக்குதல்களை தொட்டு, பாஜக அரசை திக்விஜய் சாடியதற்கு பொதுவெளியில் எதிர்ப்பு கிளம்பியதும், காங்கிரஸ் உடனடியாக பின்வாங்கியது. ’திக்விஜய் சிங் பேசியது அவரது தனிப்பட்ட கருத்துக்கள்’ என்று காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பின்னர் விளக்கமளித்தார். ’2014க்கு முன்பான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் துல்லியத் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டின் நலன் நாடும் ராணுவ நடவடிக்கைகளுக்கு காங்கிரஸின் ஆதரவு என்றும் உண்டு” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின்போது, 6 முறை துல்லியத் தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்திருக்கும் காங்கிரஸ், அந்த நடவடிக்கைகளை வைத்து விளம்பரம் தேடவில்லை என்றும் பாஜகவை இடித்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குடியரசு தின கொண்டாட்டங்கள் நெருங்கும் சூழலில், மக்கள் மத்தியிலான தேசபக்தி உணர்வுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவிப்பது, காங்கிரஸ் கட்சிக்கும், ஒற்றுமை யாத்திரையின் மூலம் அது சேகரித்த நற்பெயருக்கும் பாதகமாகிவிடும் என்ற கலக்கமே ஜெய்ராம் ரமேஷை இப்படி பேச வைத்திருக்கிறது. இதற்காக, ஆதரவு - எதிர்ப்பு எதுவுமின்றி திக்விஜய் சிங்கையும் திரிசங்கில் தவிக்க விட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in