அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே முற்றும் மோதல்: கேரளத்தில் என்னதான் நடக்கிறது?

ஆரிப் முகமது கான்
ஆரிப் முகமது கான்

கேரள இடதுசாரி அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை  தகுதிநீக்கம் செய்யும் அஸ்திரத்தோடு ஆளுநர் களமாட, பதிலுக்கு கேரள அரசோ பல்கலைக்கழகத்தில் தலையிடும் அதிகாரத்தையே ஆளுநரிடம் இருந்து பறிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கண்ணூரில் பற்றிய கனல்!

கடந்த 2019-ல், கண்ணூர் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய அளவிலான வரலாற்றுக் கூடுகை  நடந்தது. குடியுரிமை சட்டதிருத்த மசோதா பெரும் பிரச்சினையாக எதிரொலித்த நேரம் அது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஆளுநர் ஆரிப் முகமதுகான் அதை ஆதரித்து அந்தக் கூட்டத்தில் பேசினார். கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. வரலாற்று ஆராய்ச்சியாளர் இர்பான் ஹபீப் தன்னைத் தாக்க பாய்ந்ததாகவும், துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரன் அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் முதல் பரபரப்பை பற்ற வைத்தார் ஆளுநர் ஆரிப். அந்தத் தாக்குதலில் தன் உதவியாளரின் சட்டை கிழிந்ததாகவும் அண்மையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ஆளுநர்.

 கேரள அரசு தானாக முன்வந்து, தான் குற்றம்சாட்டியவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்த்தார் ஆளுநர். இடதுசாரிகள் இதைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட ஆளுநருக்கு முதல் உரசலும் அங்கேதான் ஆரம்பமானது.  ஆளுநர் குற்றம்சாட்டிய வரலாற்று அறிஞர்  இர்பான் ஹபீப்க்கு 91 வயது ஆகிறது. அந்த வயதுடையவர் தான் தன்னை  தாக்கினார் என ஆளுநர் சொல்கிறார் என்கிறார்கள் இடதுசாரிகள்.

உண்ணாவிரதத்தில் மோதல்!

கடந்த 2021  ஜூலை மாதம் திடீரென ஆளுநர்  அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. கேரளத்தில் தொடர் வரதட்சணை மரணங்கள் அப்போது வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருந்த காலம் அது. வரதட்சணைக்கு எதிராக ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை ராஜ்பவனிலேயே மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தார் ஆளுநர். அறிவித்தது போலவே காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை உண்ணாவிரதமும் இருந்தார். இந்தியாவிலேயே ஒருமாநிலத்தின் ஆளுநர் உண்ணாவிரதம் இருந்ததும் அதுவே முதல்முறை.

ஆளுநர் ஆரிப் முகமதுகானின் உண்ணாவிரதத்தில் ஒரு பொதுநோக்கம் இருந்தாலும், கேரள இடதுசாரி அரசில் வரதட்சணைக் கொடுமை அதிகம் என்பதை சுட்டிக்காட்டும் உள்நோக்கமும் இருந்ததாக கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. கேரள அரசின் பல திட்டங்களோடும் ஆளுநர் முரண்பட்டு நிற்பதும், தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயனோ அல்லது அமைச்சர்களோ நேரில் சந்தித்து சமரசம் செய்வதுமாக இறுக்கமான உறவாகவே ஆளுநர்- கேரள அரசின் பந்தம் நகர்ந்துவந்தது.

ஆர்.எஸ்.எஸ் உடன் நெருக்கம்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் மோகன் பகாவத், திருச்சூருக்கு வந்திருந்தார். இதைப்பற்றிக் கேள்விப்பட்டதும்  திருச்சூருக்கு விரைந்தார் ஆளுநர் ஆரிப். அவர் நீண்ட நேரம் காத்திருந்து மோகன் பகாவத்தை சந்தித்துத் திரும்பியதாகவும் சர்ச்சை கிளம்பியது. ஆனால் இதை ஆரிப் திரைமறைவில் நிகழ்த்துவார் என நினைத்த இடதுசாரிகளுக்கு அவர் இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார். ராஜ்பவனுக்கே செய்தியாளர்களை அழைத்து, “நான் ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவரை சந்தித்ததில் தவறு இல்லை. நினைவுதெரிந்த காலம் முதலே நான் ஆர்.எஸ்.எஸ்தான்” என்று சொன்னார்.

ஒருகட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, ‘இடதுசாரி தத்துவம் இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது’ என மார்க்சிஸ்ட் கட்சியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கினார்.  இது இடதுசாரிகளுக்கும், அவருக்கும் இடையேயான உறவை இன்னும் விரிசலாக்கியது. ஒருபக்கம் கேரள இடதுசாரிகளோடும், முதல்வர் பினராயி விஜயனோடும் முட்டிக்கொண்டே அண்மையில் தன் நூறாவது அகவையை எட்டிய முன்னாள் முதல்வரும், இந்தியாவிலேயே இப்போது இருப்பவர்களில் மூத்த இடதுசாரியுமான அச்சுதானந்தனை நேரில் சந்தித்து வாழ்த்தியும் திரும்பினார் ஆளுநர் ஆரிப் முகமதுகான்.

வெடித்துக் கிளம்பும் பல்கலை வழக்கு!

கேரளத்தில் உள்ள அப்துல்கலாம் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஸ்வரிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், துணைவேந்தர் நியமனத்தில் யூ.ஜி.சியின்  வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மூன்றுபேரை ஆளுநருக்கு பரிந்துரைத்து அவர்தான் அதில் ஒருவரை தேர்ந்தெடுக்கவேண்டும். அந்த விதி பின்பற்றப்படவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆளுநர் ஆரிப் முகமதுகான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரளத்தில்  9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்கள் மறுநாளே ராஜினாமா செய்ய வேண்டும் என மேற்படி வழக்கை உதாரணம்காட்டி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த உத்தரவுக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை சிறப்பு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் விசாரித்தார். ஆனால் அந்த விசாரணைக்கு முன்பே ஆளுநர் ஆரிப் முகமதுகான் தன் நிலைப்பாட்டை மாற்றி நவம்பர் 3-ம் தேதிக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என துணைவேந்தர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் ஆளுநர் முடிவெடுக்கும்வரை பதவியில் தொடரலாம். அதேநேரம் விளக்கம் கேட்காமல் ராஜினாமா கோரியது தவறு எனவும் சுட்டிக்காட்டியுள்ளது கேரள உயர்நீதிமன்றம். தன்னை துணைவேந்தராக நியமித்தது சரியே என தானே எப்படி விளக்கம் கொடுப்பது என துணைவேந்தர்களே விடைதெரியாத வினாவோடு தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

விதிமீறல் நடந்ததா?

பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களின் போது வேந்தர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர்களுக்கு மூன்றுபேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலைக் கொடுக்கும் வழக்கம் கேரளத்தில் தொடக்கத்தில் இருந்ததுதான். ஆளுநர் கையெழுத்துடன் நியமிக்கும் பொறுப்பு என்றாலும், இதில் மாநில அரசின் கையே ஓங்கியிருக்கும். கேரள மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனத்தின் போது கேரள அரசு மூன்றுபேர் கொண்ட பெயர் பட்டியலை ஆளுநருக்கு அனுப்பியது. அதில் முதல் பெயராக இருக்கும் பெயரைத்தான் ஆளுநர், துணைவேந்தர் ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் மூன்றாவது பெயராக இருந்த மோகனன் குன்னுமாலை நியமித்தார். இவர் பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது. இதோ இப்போதுகூட 9 துணைவேந்தர்களை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு காலியாக இருந்த கேரளப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பையும் கூடுதல் பொறுப்பாக மோகனன் குன்னுமாலுக்கே ஒதுக்கியுள்ளார் என்கிறார்கள் இடதுசாரிகள்.

ஆளுநர் தரப்பினரோ, கண்ணூரில் ஆளுநரை தாக்க முயன்ற சம்பவத்தில் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோபிநாத் ரவீந்திரனுக்கும் தொடர்பு உண்டு. இதை ஆளுநரே வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். அதன் பின்பும் கோபிநாத் ரவீந்திரனை இரண்டாவது முறையாக துணைவேந்தர் ஆக்கியுள்ளனர். அதுவும் ஆளுநின் கையெழுத்துப்பெற்றே! என ஆதங்கப்படுகிறார்கள்.

கிடப்பில் கோப்புகள்

லோக் ஆயுக்தா, பல்கலைக்கழகங்களில் ஆளுநரின்  அதிகாரக் குறைப்பு உள்ளிட்ட  சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் ஆளுநரிடம் கையெழுத்து ஆகாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில் கேரள அரசு சிறப்பு சட்டசபைக் கூட்டத்தைக் கூட்டி, வேந்தர் பதவியில் இருந்தே ஆளுநரைத் தூக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சட்ட வல்லுனர்களிடமும் ஆலோசனைக் கேட்டுவருகிறது இடதுசாரி அரசு. 

இந்நிலையில் கேரள நிதி அமைச்சர்  கே.என்.பாலகோபால் நிகழ்ச்சி ஒன்றில, ‘உத்தர பிரதேசத்தில் இருப்பவர்களுக்கு கேரளத்தைப் பற்றித் தெரியாது’’ என தான் மார்க்சிஸ்ட் கட்சியில் தேசியப் பொறுப்பில் இருந்த கடந்தகால சம்பவம் ஒன்றைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். கே.என்.பாலகோபால் தன்னைத்தான் தாக்கியுள்ளார் எனவும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கவேண்டும் எனவும் ஆளுநர், முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் கொடுத்துள்ளார். முதல்வர் பினராயி விஜயனோ, அமைச்சர், ஆளுநர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. உள்நோக்கமும் இதில் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எல்லாம் ஆளுநர் மூலம் மாநில அரசை மிரட்டுவதாக கேரள இடதுசாரிகள் இதை மக்கள் மன்றத்தின் முன்பு கொண்டு செல்கின்றன. ஆனால்  நாட்டையே உலுக்கிய ஷாபானு ஜீவனாம்ச வழக்கில் மதத்திற்கு அப்பால், மனிதக் கோட்பாட்டின்படி அந்தப் பிரச்சினையை அணுகியவர் ஆரிப் முகமதுகான். அதில் காங்கிரஸின் இஸ்லாமிய வாக்குவங்கியை மட்டுமே குறிவைத்த மதரீதியிலான அணுகுமுறை பிடிக்காமலேயே 1986-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறினார். எப்போதும் தன் மனதுக்கு சரியெனப் பட்டதையே ஆரிப்  செய்வதுதான் கடந்தகால வரலாறு என்கிறார்கள் பாஜகவினர். ஆளுநர், ஆட்சியாளர்கள் இடையேயான மோதல் கேரளத்தில் இப்போது ஓயாது போல் தெரிகிறது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in