3 வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநர்: ஆம்னி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

3 வயது குழந்தைக்கு டிக்கெட்  எடுக்கச் சொன்ன நடத்துநர்: ஆம்னி பேருந்தை சிறைபிடித்த மக்கள்

5 வயது முழுமையடையாத குழந்தைகளுக்கும் நடத்துனர் டிக்கெட் எடுக்கச் சொன்னதால் ஊர் மக்கள் சேர்ந்து பேருந்தை சிறைபிடித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் இடைச்சிவிளையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா(34) . இந்தத் தம்பதிக்கு மூன்று, மற்றும் நான்கு வயதில் குழந்தைகள் உள்ளனர். கோயம்புத்தூரில் சொந்தமாக பழைய இரும்புக்கடை வைத்திருக்கும் முத்துகிருஷ்ணன் தசரா விழா என்பதால் தன் மனைவி மற்றும் இருகுழந்தைகளையும் சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தார். தனியார் ஆம்னி பேருந்தில் சுகன்யாவுக்கு மட்டும் டிக்கெட் எடுத்த முத்துகிருஷ்ணன், ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் தேவையில்லை என்னும் அரசின் விதியால் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்கவில்லை.

கோவையில் இருந்து கிளம்பிய பேருந்து ஒட்டன்சத்திரம் பகுதியில் ஒரு உணவகத்தில் சாப்பிட நின்றது. அப்போது நடத்துநர் சுகன்யாவிடம் அவரது மூன்றுவயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் சுகன்யா எனக்கு ஆன்லைனில் டிக்கெட் எடுத்துவிட்டோம். குழந்தைக்கு டிக்கெட் கிடையாது அல்லவா என வாக்குவாதம் செய்தார். உடனே நடத்துநர் டிக்கெட் குழந்தைக்கு எடுக்காவிட்டால் பேருந்தில் இருந்து இறக்கிவிடுவேன் என மிரட்டினார்.

இந்நிலையில் சுகன்யா கையிலும் பணம் இல்லை. இதனால் அருகில் இருந்த சக பயணி ஒருவரிடம் இருந்து பணம்பெற்று டிக்கெட் எடுத்துள்ளார்.

இதுகுறித்து ஊரில் இருக்கும் தன் உறவினர்களிடம் சொன்னார் சுகன்யா. இதனால் கோபமடைந்த உறவினர்கள் திசையன்விளை அருகில் உள்ள சண்முகாபுரம் பகுதியில் இன்று காலையில் பேருந்து வந்தபோது சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in