மகளிர் ஆணையத்தில் குவியும் புகார்கள்... ஓராண்டில் மட்டும் 6.3 லட்சம் அழைப்புகள்!
டெல்லி மகளிர் ஆணையத்துக்கு கடந்த ஓராண்டில் மட்டும் 6.3 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாக ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது டெல்லி மகளிர் ஆணையத்துக்கு வந்த புகார்கள் மற்றும் வழக்குகள் பற்றிய புள்ளிவிவரங்களை அவர் வெளியிட்டார். அதில் ’’ டெல்லியில் பிரச்சினைகளில் சிக்கும் பெண்கள் மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கும் வகையில் 181 என்ற கட்டணமில்லா உதவி எண் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டணமில்லா சேவை மூலம் பெண்கள் தங்கள் குறைகளை பதிவு செய்யலாம். ஆலோசகர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் நிபுணர்களின் வலைப்பின்னல் மூலம் பிரச்னைகளை சந்திக்கும் பெண்களுக்கு உடனடி உதவிகளை வழங்க ஹெல்ப்லைன் முயல்கிறது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கிடைக்கும் அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்களும் இதன் மூலம் வழங்கப்படுகிறது. இந்த எண்ணில் கடந்த 7 ஆண்டுகளில் 40 லட்சம் பேர் அழைத்துள்ளனர்.
கடந்த ஜூலை 2022 முதல் இந்த ஆண்டு ஜூன் 2023 வரை 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் அழைத்துள்ளனர். இந்த அழைப்புகளை அடுத்து 92 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 38,342 குடும்ப வன்முறை வழக்குகள் ஆகும். 5,895 வழக்குகள் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பானவை. 3,447 வழக்குகள் போக்சோ சட்டத்துடன் தொடர்புடையவை. 4,229 வழக்குகள் கடத்தல் வழக்குகள்.
92 ஆயிரம் வழக்குகளில் 38,140 வழக்குகள் 21 முதல் 31 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அளித்த புகாரின் பேரில் பதியப்பட்டவை. 16,939 வழக்குகள் 11 வயது முதல் 20 வயது வரையிலான பெண்களுக்கானவை. 3,735 வழக்குகள் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காகவும், 40 வழக்குகள் 90 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்காகவும் பதியப்பட்டவை.
இந்த புள்ளி விவரங்களை மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல டெல்லி ஆளுநர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்