தரமில்லாத அரிசி வழங்குவதாக புகார்; ரேஷன் கடையில் அதிரடி சோதனை செய்த அமைச்சர்: நடந்தது என்ன?

தரமில்லாத அரிசி வழங்குவதாக புகார்; ரேஷன் கடையில் அதிரடி சோதனை செய்த அமைச்சர்: நடந்தது என்ன?

ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உடனடியாக அந்த ரேஷன் கடைக்கு சென்று அரிசியை  வாங்கி பரிசோதித்து அது தரமான அரிசிதான்  என்பதை அவரிடம்   அமைச்சர் சக்கரபாணி நிரூபித்தார். 

கோவை ராமநாதபுரம், 80 அடி சாலையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் கடையில் இன்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி பொங்கல் பரிசு தொகுப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

ஆய்வு செய்துவிட்டு புறப்பட்டபோது அவரிடம், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் இந்த ரேஷன் கடையில் தரமற்ற அரிசி போடுவதாக குற்றம்சாட்டினார். உடனே அமைச்சர் சக்கரபாணி கடைக்குள் புகுந்து  ரேஷன் அரிசியை காண்பிக்குமாறு ஊழியர்களிடம் கேட்டார். அவர்கள்  அரிசியை  எடுத்து  காட்டியதும் அந்த அரிசி தரமானதாகவே இருந்தது.

உடனே குற்றம்சாட்டிய அந்த நபரிடம் அந்த அரிசியை கொடுத்து சோதித்து பார்க்குமாறு கூறினார்.   அதனை பார்த்த பின்னர் இந்த அரிசி தரமானதாக உள்ளது என அவர் அமைச்சரிடம் கூறினார்.  இதனால், அங்கு சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்கு வரும் 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி தொடங்கி வைக்கிறார்.

அதன்பின், அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். கிடைக்கப் பெறாதவர்கள் 13-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம். 2007-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தான் சத்துமிக்க உணவுப்பொருட்கள சிறப்பு பொதுவிநியோக திட்டத்தில் கொண்டு வரப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. 

தேங்காய் எண்ணெய் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பரிந்துரை செய்யப்படும். கடந்த ஆட்சியில் துண்டு கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், திமுக அரசு முழு கரும்பு வழங்க உள்ளது.

வயல்வெளி மற்றும் கூலி வேலை செய்துவிட்டு ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும். அதற்கான கருவிகள் வாங்க விரைவில் டெண்டர் விடப்பட உள்ளது" என்று  கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in