
குடிபோதையில் ஓலா கார் ஒட்டுநரை தாக்கியதாக தமிழக ஆளுநரின் ஊடக ஆலோசகர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் புதூர் கிராமம் பள்ளி தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(23). இவர் சென்னையில் தங்கி ஓலா கால்டாக்சியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு 9.45 மணியளவில் கால்டாக்சி ஓட்டுநர் திருநாவுக்கரசு விமான நிலையத்தில் பயணிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மவுலிவாக்கம் மானாதபுரம் பகுதியில் வசிக்கும் திருநாள்சம்மந்தம் (39) என்பவர் விமான நிலையத்தில் இருந்து மவுலிவாக்கம் செல்லவேண்டி ஓலா காரில் ஏறியுள்ளார். அங்கிருந்து கார் புறப்பட்டு சிறிது தூரம் சென்ற உடன் மதுபோதையில் இருந்த திருநாள்சம்மந்தம் ஏடிஎம்மில் காரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் ஓட்டுநர் காரை நிறுத்தியுள்ளார்.
பின்னர் கார் புறப்பட்டு செல்லும் வழியெல்லாம் திருநாள்சம்மந்தம் காரை ஆங்காங்கே நிறுத்துமாறு கேட்டதால் ஓட்டுநர் குறிப்பிட்ட நேரத்தில் செல்லவேண்டும் எல்லா இடத்திலும் காரை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருநாள்சம்மந்தம் மதுபோதையில் ஓட்டுநர் திருநாவுக்கரசுவை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் நந்தம்பாக்கம் ஹோட்டல் மவுண்ட் அருகே ஓட்டுநர் காரை நிறுத்தி திருநாள்சம்மந்தத்தை காரில் இருந்து இறங்குமாறு கூறினார். உடனே திருநாள்சம்மந்தம் நான் யார் தெரியுமா? எனக்கூறி தகராறில் ஈடுபடவே அவ்வழியாக வந்த சக ஓட்டுநர் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநருக்கு ஆதரவாக பேசினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே தகவல் அறிந்து அங்கு வந்த நந்தம்பாக்கம் போலீஸார் இருவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த பயணி திருநாள் சம்மந்தம் தமிழக ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் என்பதும் அவர் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்ததை அடுத்து போலீஸார் அவரை சமாதானம் செய்து வேறொரு காரில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஓட்டுநர் இது குறித்து நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக ஆளுநரின் தனிப்பட்ட ஊடக ஆலோசகர் மதுபோதையில் கார் ஓட்டுநரை தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.