‘காஸிரங்காவில் இரவு சவாரி... கைது செய்யுங்கள் ஜக்கி வாசுதேவை!’

அசாம் வனஉயிர் ஆர்வலர்கள் ஆவேசம்
‘காஸிரங்காவில் இரவு சவாரி... கைது செய்யுங்கள் ஜக்கி வாசுதேவை!’

அசாம் மாநில முதல்வரும், சுற்றுலாத் துறை அமைச்சரும் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து காஸிரங்கா தேசியப் பூங்காவில் இரவு சவாரி செய்தாக வனஉயிர் ஆர்வலர்கள் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வன உயிர் ஆர்வலர்களான சோனேஸ்வர் நரா, பிரபின் பேகு ஆகிய இருவரும் கோலாகாட் மாவட்ட காவல் துறையினரிடம் ஒரு புகார் அளித்திருக்கின்றனர். அதில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சுற்றுலாத் துறை அமைச்சர் ஜெயந்தா மல்லா பருவா ஆகிய இருவரும், ஜக்கி வாசுதேவை அழைத்துக்கொண்டு காஸிரங்கா தேசியப் பூங்காவில் சனிக்கிழமை (செப்.24) இரவு சவாரி செய்ததாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இந்திய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பாதுகாக்கப்படும் இந்தச் சரணாலயத்தில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், மேற்கூரை இல்லாத வாகனத்தில் ஜக்கி வாசுதேவ், ஹிமந்த பிஸ்வ சர்மா, ஜெயந்தா மல்லா பருவா ஆகிய மூவரும் சரணாலயத்தில் மாலை நேரத்தில் செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களிலும் உள்ளூர் ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இதுவரை இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படவில்லை என்று கூறியிருக்கும் போலீஸார், முதற்கட்ட விசாரணை தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜீபால் கிரிஷக் ஷ்ரமிக் சங்கா எனும் அமைப்பின் தலைமை ஆலோசகரான சோனேஸ்வர் நரா, “வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி காஸிரங்கா தேசியப் பூங்காவில் மாலை 4 மணிக்குப் பின்னர் சவாரி மேற்கொள்ளக் கூடாது. ஆனால், 6 மணிக்கு மேல் மூவரும் அங்கு சவாரி மேற்கொண்டிருக்கின்றனர். நாங்கள் காஸிரங்கா தேசியப் பூங்கா பகுதியில் வசிக்கும் நாங்கள் பல தியாகங்களைச் செய்திருக்கிறோம். எங்கள் மக்களில் பலர் வேட்டைக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டு வனக் காவலர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். அவர்கள் மட்டும் எப்படி வனஉயிர் பாதுகாப்புச் சட்டத்தை மீற முடியும்? இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களைக் கைது செய்ய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

இந்தக் குற்றச்சாட்டை ஹிமந்த பிஸ்வ சர்மா மறுத்திருக்கிறார். “இதில் எந்த விதிமீறலும் இல்லை. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைய அங்குள்ள வார்டன் அனுமதி வழங்க முடியும். இரவில் மக்கள் அங்கு செல்லக்கூடாது என்று எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. நேற்று, இந்த சீஸனுக்காக காஸிரங்கா பூங்கா நேற்று திறக்கப்பட்டது. தற்போது சத்குரு ஜக்கி வாசுதேவும், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் வந்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டிருக்கும் அவர்கள் வந்திருப்பதால், காஸிரங்கா பூங்காவின் இந்த சீஸன் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று அவர் விளக்கமளித்திருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in