
மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை மாற்று சமுதாய இளைஞர் திருமணம் செய்த விவகாரத்தில், மணமகனுடன் தொடர்பில் இருந்த இளைஞரைக் கடத்தி தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில் மாவீரன் வன்னியர் சங்கத் தலைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ரிக்கப்சந்த் என்பவரின் மகள் சோனல்குமாரி (19) என்பவர் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பாலச்சந்தர்(20) என்ற இளைஞரை காதலித்து வந்தார். இந்த நிலைல் இவர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி ஜூலை 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் கடந்த 5-ம் தேதி இருவரும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருவரும் ஆஜராகினர். சோனல்குமாரி மேஜர் என்பதால், அவரது விருப்பப்படி மணமகன் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டார். அதையடுத்து கணவருடன் சோனல்குமாரி வெளியூர் சென்றுவிட்டார்.
இந்நிலையில் பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கு நெருக்கமாக இருந்த மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் சாலியத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் (34) என்பவரை கடந்த 7-ம் தேதி அவரது வீட்டில் இருந்து ஒரு கும்பல் காரில் கடத்திச் சென்றது.
பின்னர் அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், காரில் வந்த ஒரு கும்பல் தன்னைக் கடத்திச்சென்று மயிலாடுதுறை அருகே வழுவூர் கிராமத்தில் ஒரு வீட்டில் அடைத்து வைத்ததாக ராஜேஷ் கூறினார். அத்துடன், மாவீரன் வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் சிலர் சேர்ந்து, காதல் திருமணம் செய்து கொண்ட சோனல்குமாரியும், பாலச்சந்தரும் எங்கு இருக்கின்றனர் என்று கேட்டு தன்னை அடித்து தாக்கி, சித்ரவதை செய்ததாகவும் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 12-ம் தேதி ராஜேஷ் புகார் அளித்தார்.
இதனிடையே, மாவீரன் வன்னியர் சங்க தலைவர் வி.ஜிகே.மணிகண்டன், பாலச்சந்தரின் நண்பர் சதீஷிடம் செல்போனில் பேசிக்கொண்டே ராஜேஷை தாக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் போலீஸார், கடத்திச் சென்றது, ஆபாசமாக திட்டியது, அடித்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளில்; வழக்குப்பதிவு செய்து மாவீரன் வன்னியர் சங்க தலைவர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.