
அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே இனி அனுமதி வழங்க உள்ளார்கள்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசின் குறிப்பிட்ட துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது திறமை மற்றும் தகுதியை நிரூபித்து, இதர துறைகளின் உயர் பதவிகளுக்கான போட்டிகளில் பங்கேற்பது நீண்ட காலமாக நடந்துவருகிறது. ஆனால் அவற்றுக்கு துறை உயரதிகாரிகளிடம் அனுமதி பெறுவதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருந்து வந்தன. அவற்றை எளிமையாக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இனி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகத்துக்கே விண்ணப்பிக்கலாம். உரிய அனுமதியை வழங்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே அதிகாரம் பெறுவார்கள். இதற்கான அறிவிப்பினை பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக, போட்டித்தேர்வுகளில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வாயிலாக பள்ளிகல்வி ஆணையரகத்துக்கு அனுப்பும் நடைமுறை இருந்தது. அதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் புதிய ஏற்பாடு உத்தரவாகி உள்ளது.