
சர்வதேச சுற்றுலாத் தளமான கன்னியாகுமரியில், சுற்றுலாப் பயணிகளை தொழில்முறையாக புகைப்படம் எடுப்பதில் நடந்த தொழில் போட்டியில் சக புகைப்படக் கலைஞரைத் தாக்கிய அதிமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவானவரை போலீஸார் தேடிவருகின்றனர்.
குமரிமாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(50). இவர் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் புகைப்படக் கலைஞராக உள்ளார். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அய்யன் திருவள்ளுவர், சுவாமி விவேகானந்தர் பாறை பின்னணியில் புகைப்படம் எடுத்து உடனே பிரின்ட் போட்டுக் கொடுக்கும் வேலை செய்து வருகிறார். இதே கொட்டாரம் ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற சுரேஷும் (54) இதே வேலை செய்து வந்தார்.
சுப்பிரமணியன் என்ற சுரேஷ் கொட்டாரம் பேரூராட்சியில் அதிமுக துணை செயலாளராகவும், கொட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைத் தலைவராகவும் உள்ளார். கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகளிடம் ஆர்டர் பிடித்து புகைப்படம் எடுப்பதில் இவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே தொழில் விரோதம் இருந்துவந்தது. இதனால் கோபத்தில் இருந்த சுப்பிரமணியன், மணிகண்டனை கம்பால் சரமாரியாகத் தாக்கினார். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதிமுக நிர்வாகி சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்த கன்னியாகுமரி போலீஸார், தலைமறைவாக இருக்கும் அவரைத் தேடி வருகின்றனர்.