உஷார்... நோய் எதிர்ப்பாற்றலுக்கு, உலை வைக்கும் உணவுமுறை... இதையெல்லாம் தவிர்த்திடுங்க!

சரிவிகித உணவு
சரிவிகித உணவு

உடல் நலத்துக்காக உணவுமுறையில் சீரிய கவனம் செலுத்துவோரும், தங்களை அறியாது உடலின் நோய் எதிர்ப்பாற்றலை குலைக்கும் வகையில் உணவூட்டத்தில் தவறுகளை இழைக்கவே செய்கிறார்கள். அவற்றில் சிலவற்றை அறியாதும் செய்வார்கள் என்பதால், அவற்றை அடையாளம் காண்பது நமது உணவுமுறையை சீர்படுத்தி, உடலின் நோய் எதிர்பாற்றலை அவை பாதிக்காது பேண உதவும்.

உணவுமுறை என்பது அன்றாடம் நமது உடலுக்குத் தேவையான சத்துக்களை நிவர்த்தி செய்யும் உணவுகளை உட்கொள்வதை குறிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் என்பது, பலவிதமான நோய்கள் நம்மை தாக்காது நமது உடலை கவசமாக காக்கும் ஆற்றலைக் குறிக்கும். உணவூட்டம் வாயிலாகவே நமக்கான நோய் எதிர்ப்பாற்றலை பெருமளவு நாம் அடைய முடியும்.

நோய் எதிர்பாற்றல்
நோய் எதிர்பாற்றல்

உணவுமுறையில் அதிகமானோர் இழைக்கும் அடிப்படையான சில தவறுகளை இங்கே பார்க்கலாம். இவற்றை உணர்ந்துகொள்வதும், தவறு இருப்பின் அவற்றை சரிசெய்துகொள்வதும் நாம் உண்பதன் நோக்கத்தை முழுமையடையச் செய்யும்.

காலை உணவை தவிர்த்தல்:

காலையில் சாப்பிட நேரமில்லை, பசிப்பதில்லை, இரவு தாமதமாகவே உண்டேன், அடுத்தவேளை சேர்த்தே சாப்பிட்டுக்கொள்வேன்... இப்படி பல்வேறு சாக்குப்போக்குகளை முன்வைத்து காலை உணவை தவிர்ப்பவர்கள் அதிகம்.

காலை உணவு என்பது அன்றைய நாளின் நமது செயல்பாடுகளை தீர்மானிக்கக் கூடியவை. அதற்கேற்ப உடலுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கக் கூடியவை. காலை உணவை தொடர்ந்து தவிர்ப்பவர்கள், தங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை சிறுகச் சிறுக சிதைய காரணமாகிறார்கள். எனவே காலை உணவை தவிர்க்காது உண்பதோடு, சகல சத்துக்களும் அதில் நிறைந்திருக்குமாறு அதனைப் பேணுவதும் நல்லது.

நீர் அருந்தலும் அவசியம்
நீர் அருந்தலும் அவசியம்

தண்ணீர்.. தண்ணீர்:

சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்வோர் கூட முறையாக நீர் அருந்துவதில்லை. நமது உடலுக்கு வயது, உடல் எடை மற்றும் அன்றாட உழைப்பு சார்ந்து போதிய நீரினை உட்கொள்வது அவசியம்.

போதிய உடல் உழைப்பு இல்லாதோர், சதா ஏசி அறையில் பழியாக கிடப்போர்... உள்ளிட்டவர்கள் தங்களை அறியாது தண்ணீரை தவிர்த்து விடுகிறார்கள். இவை நாள்பட்ட சிறுநீரக பாதிப்புக்கு ஆளாக்குவதோடு. நீரேற்றத்தை பாதித்து, உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியையும் காணடிக்கச் செய்துவிடும்.

வேண்டாமே பெருந்தீனி:

ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஒருவேளை உணவுக்கான தின்பண்டங்களை கொறிப்பவர்களுக்கு, உடல் நோய்எதிர்ப்பு சக்தி குலையத் தொடங்கிவிடும். இரு உணவுக்கான அதிகப்படி இடைவேளையை நிரப்பவும், இளைப்பாறலின் பெயரிலும், சுவைக்காகவும் தின்பண்டங்களை கொறிப்பதில் தவறில்லை.

அவற்றை மிதமாகவும், உலர் பழங்கள், கொட்டைகள், முழு பழங்கள் என சத்துள்ளதாகவும் அமைத்துக்கொள்வது நல்லது. மைதா மாவு மற்றும் கேடு எண்ணெயால் ஆன பேக்கரி மற்றும் துரித ரகங்கள் நா ருசிக்கு அப்பால் உடல் நோயெதிர்ப்பு சக்தியை குலைக்கவே செய்யும்.

தொப்பைக்கு மட்டுமே உதவும் குப்பை உணவுகள்
தொப்பைக்கு மட்டுமே உதவும் குப்பை உணவுகள்

சரிவிகித உணவே சிறப்பு:

உடல் இளைப்பு, வனப்பு, கட்டுடல் பேணல் உள்ளிட்ட தேவைகளுக்காக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பதும், புரோட்டின் ரகங்களை மட்டுமே சேர்த்துக்கொள்வதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்காக வழக்கமான உணவுமுறையில் மட்டுமன்றி கூடுதல் போஷாக்கின் பெயராலும் புரோட்டினை தனியாக சேர்த்துக்கொள்வதும் அதிகரித்து வருகிறது.

நீரிழிவு நேரக்கூடும், உடல் எடை கூடக்கூடும் என்ற கணிப்புகளின் அடிப்படையிலும் கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பவர்கள் அதிகம். உணவூட்டத்தில் எந்த சத்தும் தவிர்க்கக்கூடியதல்ல. தனிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் உடையவர்கள் தவிர்த்து மற்ற அனைவரும், கார்போஹைட்ரேட், கொழுப்பு என சகல சத்துக்களும் போதிய அளவுக்கு உடலில் சேர்ப்பது மிகவும் முக்கியம்.

கூடுதல் ஆலோசனைகள் மற்றும் ஐயங்களுக்கு உங்களது குடும்ப மருத்துவர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணரை நாடலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in