பொது சிவில் சட்டம் ஆபத்தானது; விளாசும் விஜயதரணி!

விஜயதரணி
விஜயதரணி
Updated on
3 min read

மனதில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் பளிச்சென சொல்பவர் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. இப்படிப் பேசுவதால் கட்சிக்குள் அவர் பெற்றதைவிட இழந்தது ஏராளம். ஆனாலும் தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ளாத தரணி, இப்போதும் ஆக்டிவாக அரசியல் களத்தில் நிற்கிறார். அடுத்த காங்கிரஸ் தலைவர் ரேஸில் இவர் பெயரும் அடிபட்டுக்கொண்டே இருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைமை மாற்றம் ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்வியுடன் அவரிடம் சின்னதாய் ஒரு பேட்டியைத் தொடங்கினோம்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மோடி அரசு அமல்படுத்த நினைக்கும் பொது சிவில் சட்டம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் நம் நாட்டின் ஆணிவேர். அதைத்தான் காங்கிரஸ் கட்சியும் உறுதியாக நம்புகிறது. பொது சிவில் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தெளிவாகக் கூறிவிட்டது. “பொது சிவில் சட்டத்தை மிகத் தீவிரமாக காங்கிரஸ் எதிர்க்கிறது. இதில் எவ்விதமாற்றமும் இல்லை” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்தச் சட்டம் தொடர்பாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு விவாதம் நடந்தால் காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டம் ஆபத்தானது. நம் தேசியப் பண்பாட்டையும் அது சிதைத்துவிடும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பது நல்லது தானே? மத ரீதியிலான பாகுபாட்டை தானே பொது சிவில் சட்டம் தடைசெய்கிறது?

அந்தச் சட்டத்தில் என்ன கொண்டுவரப் போகிறார்கள் என்பதை தெரிந்த பின்புதான் இதுகுறித்து இவ்வளவு நுட்பமாகவும், விரிவாகவும் பேசமுடியும். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவே பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறதே... கவனிக்கவில்லையா?

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஏன் இத்தனை இழுபறி? உண்மையில் என்ன தான் பிரச்சினை?

மேலிடம் இன்னும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதுதான் இதிலிருந்து உணர வேண்டிய செய்தி. கே.எஸ்.அழகிரியே தொடர்வாரா அல்லது புதிய தலைவரா என இன்னும் முடிவு எடுக்காததால் தான் இந்த இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாற்றம் இருந்தால் இம்முறை பெண் தலைவர்களையும் பரிசீலனை செய்ய வேண்டும் என நானும்கூட கோரிக்கை வைத்திருக்கிறேன். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், மாற்றம் இருக்கும்பட்சத்தில் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள் எனவும் கேட்டு இருக்கிறேன். தலைமையிடம், ’மாற்றம் இருந்தால் மட்டும்’ என்று சொல்லியே தான் கோரிக்கை விடுத்தேன். நானும் அந்தப் பதவிக்கு முயற்சித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

பாஜக தேர்தல் பணிகளில் முந்துகிறது. காங்கிரஸ் முகாமில் இன்னும் மாநிலத் தலைவர் பஞ்சாயத்தே முடியவில்லை. இது தேர்தல் பணியை பாதிக்காதா?

நாங்கள் தேர்தல் பணியை முன்பே தொடங்கி விட்டோம். தேர்தல் பணிகள் தொய்வின்றி தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அது ஒன்றும் பாதிக்காது. தலைவர் நியமனத்தில் காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் மக்களவைத் தேர்தல்வரை இவரையே தொடர் அனுமதிக்கலாம் என ஆலோசிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் தலைமை அதை விரைந்து அறிவிக்க வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் தண்ணீர் பங்கீட்டுக்குச் சிக்கல், மேகேதாட்டு அணை என தமிழகத்துக்கு எதிரான பிரச்சினைகளும் அணிவகுக்கிறதே..?

தண்ணீர் பிரச்சினை என்பதே நீண்டகாலமாக இருக்கும் அரசியல் தான். அந்த அரசியல் தேர்தல் நேரங்களில் இன்னும் கொஞ்சம் வீரியமாக வெளிவரும். அது தான் கடந்தகால நடப்பு. மக்கள் அதைப் புரிந்துவைத்திருக்கிறார்கள். தமிழக காங்கிரஸைப் பொறுத்தவரை தமிழகத்திற்கு உரிய நீரைப் பெறுவது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் சிக்கல் இல்லாமல் இதில் சுமூகத் தீர்வு கிடைக்கும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இந்த விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமா?

தமிழக காங்கிரஸ் கட்சி நிச்சயம் அந்த முயற்சிகளை எடுக்கும். அதில் சந்தேகமே வேண்டாம்.

செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருப்பதில் சட்ட வல்லுநராக உங்களின் பார்வை என்ன?

அமலாக்கத்துறை ஏராளமானோர் மீது நடவடிக்கை எடுத்தார்கள். அதன் முடிவுகள் எதையும் இதுவரை வெளியிடவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுதான் வெளியிடுவார்களா எனவும் தெரியவில்லை. செந்தில் பாலாஜி விவகாரத்தின் பின்னால் அரசியல் உள்ளது என்பதில் துளியும் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், அமலாக்கத்துறைக்கு ஏதோ ஒரு துருப்புச் சீட்டு கிடைக்கப் போய்த்தான் அதை பயன்படுத்தவும் செய்கிறார்கள் எனவும் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

மக்களவைத் தேர்தலுக்கு தமிழக காங்கிரஸ் தயாராகத்தான் உள்ளதா?

தமிழகத்தைப் பொறுத்தவரௌ அனைத்துத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கி வேலைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. நரேந்திர மோடி ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மக்களவைத் தேர்தல் வெற்றியின் முன்னோட்டமாகத் தான் கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிகு வெற்றியைப் பரிசாகத் தந்தார்கள். இனி, இந்த வெற்றிகள் தொடரும்.

ஒவ்வோரு தேர்தலிலும் எம்.பி சீட் கேட்பீர்கள். இன்னும் அந்த ஆசை இருக்கிறதா?

இம்முறையும் கேட்பேன். கன்னியாகுமரியில் இம்முறை வாய்ப்பு இல்லை. சிட்டிங் எம்பி உள்ள தொகுதி என்பதால் புதிய வேட்பாளருக்கு வாய்ப்புக் குறைவு.

இதேபோல் ஒவ்வொரு தேர்தலிலும் சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்கு சீட் இல்லை என்ற நிலைப்பாட்டை கட்சி எடுத்துவருகிறது. இம்முறையும் அதை தலைமை எடுக்கும் வாய்ப்பு அதிகம். அதையும் தாண்டி கன்னியாகுமரி இல்லாவிட்டாலும் தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை தலைமை எனக்குத் தரவேண்டும் எனக் கோரிக்கை வைப்பேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in