சென்னை காவல்துறையில் பணியிட மாறுதலுக்கு குழு அமைப்பு: தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை காவல்துறையில்  பணியிட மாறுதலுக்கு குழு அமைப்பு: தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

சென்னை காவல்துறை பிரிவில் மூன்று மாநகர காவல் ஆணையரகங்கள் இடையே பணியிட மாறுதலுக்காக நகரங்களுக்கிடையேயான பணியிட மாறுதல் குழு அமைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கூடுதல் எஸ்.பி கீழ் உள்ள பணியிடங்களுக்கு பணியிட மாற்றம் , பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முடிவு எடுக்க டிஜிபி தலைமையில் நான்கு ஏடிஜிபிக்கள் கொண்ட காவல்துறை நிறுவுதல் வாரியம் (police establishment board) அமைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சென்னை பெருநகர காவல் துறை மூன்றாக பிரிக்கப்பட்டு தாம்பரம் காவல் ஆணையரகம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் உருவாக்கி செயல்படத் தொடங்கியுள்ளது,

இந்த மூன்று காவல் ஆணையரங்கங்கள் இடையே பணியிட மாறுதல் பெறுவதற்கு தமிழக காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு பல்வேறு மனுக்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும் 3 காவல் ஆணையரகம் இடையே பணிமாறுதல் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் நகரங்களுக்கு இடையே பணியிட மாறுதல் செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை தாம்பரம், ஆவடி ஆகிய காவல் ஆணையரங்கங்களுக்கு இடையே ஆய்வாளர் கீழ் உள்ள காவலர்கள் பணியிட மாறுதல் பெறுவதற்கு இந்த குழு முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நகரங்களுக்கு இடையேயான பணியிட மாறுதல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை காவல்துறை ஆணையரும், உறுப்பினர்களாக தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையர் ஆகியோர் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் மூத்த அதிகாரி குழுவின் தலைவராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிட மாறுதலில் காத்திருப்போர் பட்டியலுக்கான விவரங்கள் அனைத்தும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்தக் குழு கூடி பணியிட மாறுதல் கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை காவல்துறை ஆணையர் பணியிட மாறுதல் உத்தரவை ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அனுமதியோடு பிறப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிட மாறுதல் விரும்பும் ஆய்வாளர் கீழ் உள்ள காவலர்கள், அவர்களுடைய காவல் ஆணையரிடம் மனு அளிக்கலாம். ஏற்கனவே தமிழக காவல்துறை தலைமையிடத்தில் பணியிட மாறுதல் கோரி அனுப்பப்பட்ட மனுக்கள் அனைத்தும் நகரங்களுக்கு இடையேயான பணியிட மாறுதல் குழுவிற்கு அனுப்பப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய பணியிட மாறுதல் விண்ணப்பிக்கும் முறை குறித்து காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளிலும், சம்பந்தப்பட்ட காவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in