அடுத்தடுத்து மயங்கி விழுந்த கல்லூரி மாணவர்கள்: சென்னை அரசு விடுதியில் நடந்தது என்ன?

அடுத்தடுத்து மயங்கி விழுந்த கல்லூரி மாணவர்கள்: சென்னை அரசு விடுதியில் நடந்தது என்ன?

அரசு விடுதியில் சாப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 4 மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையம் மேலும் 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை வடபழனி திருநகர், ஹாஸ்டல் சாலையில் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விடுதியில் தங்கி இருந்த நான்கு கல்லூரி மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே சக மாணவர்கள் பாதிக்கப்பட்ட 4 மாணவர்களை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீஸார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் நேற்றிரவு மேலும் 6 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பதறிபோன சக மாணவர்கள் அவர்களை கே.கே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ச்சியாக மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இது குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் வயிற்றுப்போக்கு வாந்தி, மயக்கம் பிரச்சினை ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து ராயப்பேட்டையை சேர்ந்த விடுதி சமையல்காரர் கோகுல்நாத் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி விடுதியில் சமைக்க பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் குடிநீர் ஆகியவற்றை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அடுத்தடுத்து மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in