மாணவன் தற்கொலை முயற்சிக்கு அறநிலையத்துறை தான் காரணம்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

மாணவன் தற்கொலை முயற்சிக்கு அறநிலையத்துறை தான் காரணம்: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

அறநிலையத்துறை மிரட்டலால் தாய், தந்தை இல்லாத கல்லூரி மாணவன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, "தமிழ்நாட்டில் அறநிலையத்துறை மற்றும் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான குடியிருப்பு மனைகள், விளைநிலங்களில் குடியிருப்பவர்களை  நீதிமன்ற நடவடிக்கை  என்கிற பேரில் வெளியேற்றும் நடவடிக்கையும் தொடர்கிறது. 

சுதந்திரத்திற்கு முன்னும் , பின்னும் இல்லாத வகையில் விவசாயிகளுடைய விளைநிலங்கள் குத்தகை பாக்கி என்கிற பெயரிலும், குடியிருப்பு மனைகள் வாடகை பாக்கி என காரணம் காட்டி ஏலம் விடும் மோசமான நடவடிக்கை அரங்கேறுகிறது. நிலத்தை அபகரித்ததாக சொல்லி கிரிமினல் நடவடிக்கை எடுப்பதாக கூறி மிரட்டி வருகிறார்கள்.

மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோயிலுக்கு சொந்தமான குடியிருப்பு மனையில் மதுக்கூர் சாலையில் பாண்டியன் என்பவரது மகன் வீரஅரசு வசித்து வருகிறார். இவரது தந்தை பாண்டியன் மற்றும் தாய் இருவரும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஒருவர் பின் ஒருவராக மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டனர். இவரது இளைய சகோதரன் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். ஆதரவற்ற நிலையில் தனது உறவினர்கள் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில்  அறநிலையத்துறை ஊழியர்கள் அவர்கள் வசிக்கும்  இடத்திலிருந்து  வெளியேற்றி விடுவோம்  என இவரை நேரில் சென்று மிரட்டியதாகவும்,  சத்தமிட்டு  பேசியதாகவும் தெரிகிறது.  இதனால் அவமானப்பட்ட அவர்  தற்கொலை செய்து கொள்ள  விஷம் அருந்தியிருக்கிறார்.  மன்னார்குடியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். 

இப்படி  மிரட்டி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு  அறநிலையத்துறை செயல்படுவதை  தமிழக முதலமைச்சர் தலையிட்டு  உடனடியாக  தடுத்து நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்டிருக்கிற அறநிலையத்துறை ஊழியர்கள் மீது உரிய விசாரணை செய்து கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.

தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்கள்  குடியிருப்பு வாடகை உரிமையை புதுப்பித்து அவர்களுக்கு குடியிருப்பு மனைகளை உறுதியாக்க வேண்டும். பேரிடர் காலங்களுக்கான வாடகை பாக்கியெல்லாம் தள்ளுபடி செய்ய வேண்டும்.  குத்தகை விவசாயிகளுக்கு குத்தகை நிலுவைத்தொகை முழுமையும் தள்ளுபடி செய்து அரசு கொள்கை முடிவெடுத்து நீதிமன்ற நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர முதலமைச்சர் முன்வர வேண்டும். இதனை  வலியுறுத்தி வருகிற 27-ம் தேதி மன்னார்குடியில் குத்தகை விவசாயிகள்,  கோயில் மனை குடியிருப்போர் மாநாடு  நடைபெற உள்ளது'' என்று தெரிவித்தார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in