தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவர் பிணமாக மாறிய பரிதாபம்: டூவீலரின் குறுக்கே பாய்ந்த நாயால் விபத்து

லோகேஸ்வரன்
லோகேஸ்வரன்

மயிலாடுதுறையில் கல்லூரி முடிந்து இரு சக்கர வாகனத்தில்  வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர்  நாய்  குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் லோகேஸ்வரன்(17). இவர் மன்னம்பந்தலில் உள்ள தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.  கல்லூரியில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில்  இன்று நடைபெற்ற தேர்வை எழுதிய லோகேஸ்வரன்  அவரது நண்பருக்குச் சொந்தமான  இருசக்கர  வாகனத்தில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அவருடன் சக நண்பர்களான கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோரும் வாகனத்தில் சென்றனர்.

மயிலாடுதுறை சாலையில் மன்னம்பந்தல் அருகே சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று திடீரென  குறுக்கே  ஓடி வந்தது. இருசக்கர வாகனத்தில் நாய் மோதியதில்  கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் அருகில் இருந்த கோயில் கேட்டை உடைத்துக் கொண்டு  உள்ளே சென்று விழுந்தது. இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த லோகேஸ்வரன் கோயிலின் சுவற்றில் மோதி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணா மற்றும் பிரசன்னா ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். 

தகவல் அறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸார், இறந்த லோகேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்த  இருவரையும் மீட்டு மயிலாடுதுறை  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வுக்கு வந்த கல்லூரி மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in