தெலங்கானாவில் மாணவி ஒருவர் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் நடனமாடியபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என மருத்துவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள நியலகொண்டபள்ளி அரசு ஆதர்ஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த குண்டு அஞ்சையா மற்றும் சாரதாலா தம்பதியின் 16 வயது மகள் பிரதீப்தி சிங் சக மாணவர்களுடன் நடனமாடியுள்ளார் அப்போது திடீரென மாணவி மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த மருத்துவ கல்லூரி ஆசிரியர்கள் மாணவிக்கு முதலுதவி கொடுத்தனர். ஆனால் மாணவி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார்.
உடனே அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவிக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருந்ததும், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய பெற்றோரிடம் அறிவுறுத்தி இருந்ததும் தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவ செலவிற்கு போதிய பணம் இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் மாணவிக்கான அறுவை சிகிச்சையை தள்ளிப் போட்டுள்ளார். இந்த நிலையில் தான் மாணவி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இதய நோய் நிபுணர் மருத்துவர் கோனேட்டி நாகேஸ்வரராவ், “இதய நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உடலை வருத்தி செய்யும் எந்த வேலைகளையும் செய்ய அனுமதிக்காதீர்கள். இது அவர்களின் இதயத்தை செயலிழக்க செய்து விடும். அவர்கள் நடனம், உடற்பயிற்சிகளில் ஈடுபடக்கூடாது. மேலும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாமதிக்காமல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்”எனவும் அறிவுறுத்தியுள்ளார்