செமஸ்டர் தேர்வுக்குப் பயந்து கல்லூரி மாணவி தற்கொலை: பெற்றோர் அதிர்ச்சி

செமஸ்டர் தேர்வுக்குப் பயந்து கல்லூரி மாணவி தற்கொலை: பெற்றோர் அதிர்ச்சி

செமஸ்டர் தேர்வுக்குப் பயந்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரும்பாக்கம் துர்க்கை அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியர் ஹரி. இவரது 17 வயது மகள் கௌரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை தந்தை ஹரி வழக்கம் போல் வேலை சென்றுள்ளார். கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடந்து வரும் நிலையில் மதியம் தேர்வு என்பதால் காலையில் மாணவி வீட்டில் இருந்துள்ளார். மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ஹரி வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தால் நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக பார்த்த போது கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த மாணவியை மீட்டு மேடவாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த போலீஸார், மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவி தேர்வுக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டாரா , வேறு காரணத்தால் தற்கொலைசெய்து கொண்டாரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செமஸ்டர் தேர்வுக்குப் பயந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெற்றோர் மற்றும் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in