ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல ஆயிரத்தை இழந்தார்: உயிரை மாய்க்க முயன்ற பொறியியல் மாணவர்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல ஆயிரத்தை இழந்தார்: உயிரை மாய்க்க முயன்ற பொறியியல் மாணவர்

ஆன்லைன் ரம்மியால் 75 ஆயிரத்தை இழந்த சேலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இளைஞர்கள், கணினி பொறியாளர்கள், குடும்பத் தலைவர்கள், தலைவிகள், மாணவர்கள், அரசு அதிகாரிகள் என பலரும் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

இதனையடுத்து ஆன்லைன் ரம்மியின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவும் ஆய்வு மேற்கொண்டு தங்களுடைய ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து விட்ட நிலையில் அந்த அறிக்கையின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனையும் நடத்தி இருக்கிறார்.

ஆனாலும் இன்னமும் ஆன்லைன் ரம்மியை தடை செய்வது குறித்து அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஆன்லைன் விளையாடி 75 ஆயிரத்தை இழந்த சேலம் சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் சூரிய பிரகாஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு முயன்றவரை தகுந்த நேரத்தில் காப்பாற்றி சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அனுமதித்தனர். இந்நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி மேலும் பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிப்பதற்குள் தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்து சட்டம் இயற்றிட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in