பிரசவத்துக்கு மருத்துவமனை சென்ற 10-ம் வகுப்பு மாணவி: ஆதார் அட்டையால் சிக்கிய கல்லூரி மாணவன்!

பிரசவத்துக்கு மருத்துவமனை சென்ற 10-ம் வகுப்பு மாணவி: ஆதார் அட்டையால் சிக்கிய கல்லூரி மாணவன்!

18 வயதுக்கு கீழ் உள்ள மைனர் பெண்களைத் திருமணம் செய்வது குற்றம் என அரசும், குழந்தைகள் குழும அதிகாரிகளும் பலவகைகளில் பிரச்சாரம் செய்தும் அந்தத் தவறைத் தொடர்பவர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அந்தவகையில் கோவை மாவட்டத்தில் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் பத்ரிநாத்(19). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பயின்று வருகிறார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவரைக் காதலித்தார். கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி, இவர் அந்த சிறுமியை மருதமலை அடிவாரத்திற்கு அழைத்துப் போய் தாலிகட்டினார். தொடர்ந்து தன் வீட்டிற்கும் அழைத்துச் சென்றுவிட்டார்.

பத்ரிநாத் தனது அம்மாவிடம் அந்த மாணவிக்கு 18 வயது ஆகிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். இதை நம்பி அவரும் தன் வீட்டில் சேர்த்துள்ளார். இருவரும் சேர்ந்தே குடும்பமும் நடத்தினர். இதில் 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாணவிக்கு நேற்று பிரசவ வலி வந்தது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட போது ஆதார் கார்டை வாங்கிப் பார்த்தனர். அப்போது மாணவி 18 வயதுக்கு முன்பே கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் இதன்பேரில் கல்லூரி மாணவர் பத்ரிநாத்தைக் கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in