`சொகுசாக வாழலாம் என்னுடன் திருட வா'; ஆசைகாட்டிய நண்பர்: வாழ்க்கையை தொலைத்த கல்லூரி மாணவன்

`சொகுசாக வாழலாம் என்னுடன் திருட வா'; ஆசைகாட்டிய நண்பர்: வாழ்க்கையை தொலைத்த கல்லூரி மாணவன்

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு செல்போன், செயின் பறிப்பில் வந்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கல்லூரி மாணவனை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பார்க் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர் ஒருவர் திருடிச் செல்ல முயன்றார். அதைப் பார்த்த பொதுமக்கள் திருடன் என கூச்சலிட்டனர். அதை அடுத்து அங்கிருந்த அனைவரும் ஓடிவந்து, வாலிபரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் பிடிப்பட்ட வாலிபரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சென்னை புழல் காவாங்கரை பன்னீர்செல்வம் தெரு பகுதியைச் சேர்ந்த செபஸ்டின் ( எ) டேனியல்(20) என்பது தெரியவந்தது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது, இவரது நண்பர் ஒருவர் செயின்,செல்போன், பைக் முதலான திருட்டுகளில் ஈடுபட்டு, ஐபோன், விதவிதமான ஆடைகள், விலையுயர்ந்த பைக் என சொகுசாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

பின்னர் அந்த நண்பர் இதுபோன்று சொகுசாக வாழ வேண்டுமென்றால் தன்னுடன் சேர்ந்து வழிபறி, திருட்டில் ஈடுபடுமாறு டேனியலையும் கூட்டாகத் திருடுவதற்கு அழைத்தார். நண்பன் சொகுசாக வாழ்ந்து வருவதை அறிந்திருந்த டேனியல், வீட்டின் வறுமையைப் போக்கி, சொகுசு வாழ்க்கை வாழ நினைத்து தனது நண்பருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபடத் தொடங்கினார்.

பின்னர் இருவரும் சேர்ந்து தொடர்ந்து, செல்போன், செயின் பறிப்பு, பைக் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தனர். திருட்டில் கிடைத்த பொருட்களை விற்று அதில் வந்த பணத்தை வைத்து விலையுயர்ந்த ஆடை, செல்போன், போதை விருந்து என டேனியல் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.

மேலும் திருட்டில் அளவுக்கு அதிகமான பணம் கிடைத்ததால் 2019-ம் ஆண்டு கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு முழு நேர திருட்டுச் செயலில் ஈடுபட்டு வந்ததும், இதேபோல் கோயம்பேட்டில் பைக் திருடும் வேளையில், சிக்கியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட டேனியல் மீது மாதவரம், புழல், செங்குன்றம், திருமங்கலம், கோயம்பேடு ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி, செல்போன் பறிப்பு, பைக் திருட்டு என சுமார் 6 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து டேனியலிடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸார் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

’மெட்ரோ’ பட பாணியில் கல்லூரி மாணவனிடம் ஆசை வார்த்தை கூறி வழிப்பறிகளிலும் திருட்டுகளிலும் ஈடுபடுத்திய முக்கிய நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in