சென்னை ரயில்களில் தொடரும் அட்டகாசம்: கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்!

சென்னை ரயில்களில் தொடரும் அட்டகாசம்: கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு ஜாமீன்!

சென்னை புறநகர் ரயிலில் பாட்டுப்பாடி ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இதன் பின் அவர்கள் எச்சரிக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை புறநகர் ரயில்களில் மாணவர்கள் கத்தியைக் காட்டி அட்டகாசம் செய்வதும், 'ரூட் தல' போட்டியின் காரணமாகக் கலவரத்தில் ஈடுபடுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம், திருத்தணி வரையில் செல்லும் புறநகர் ரயிலில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கும்மாளம் அடித்து வந்திருக்கிறார்கள். மேலும் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், பாட்டுப் பாடி, விசில் அடித்தும் பயணிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரயில் பயணிகள் ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப் படையினர் நேற்று தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருத்தணி நோக்கிச் சென்ற புறநகர் ரயிலில் வந்த கல்லூரி மாணவர்கள் கார்த்தி(19) மற்றும் ஷயன்ஷா ஆகிய இருவரும் படிக்கட்டில் தொங்கியபடி, பாட்டுப் பாடி பயணிகளை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதைக் கண்ட காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவர்களைக் கடுமையாக எச்சரித்த காவல்துறையினர், அவர்களுக்கு ஜாமீன் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in