'மாண்டஸ்' புயலால் 90 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும்: பேனர்களை அகற்ற காரைக்கால் கலெக்டர் அதிரடி உத்தரவு

'மாண்டஸ்' புயலால் 90 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும்: பேனர்களை அகற்ற  காரைக்கால் கலெக்டர் அதிரடி உத்தரவு

வங்கக்கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் கரையை நெருங்கி வரும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுகள், பேனர்கள், டிஜிட்டல் பிளக்ஸ்கள் என  அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில், " 'மாண்டஸ் புயலைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தால், சம்பந்தப்பட்ட துறைகள், தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் பிற துணை அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அங்கீகரிக்கப்படாத மற்றும்  சட்டவிரோத பேனர்கள், ஹோர்டிங்குகள்,  ஃப்ளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்கள், விளம்பரக் கம்பங்கள் போன்றவற்றை தேவையற்ற முறையில் அமைப்பது மனித உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, பொது அமைதிக்கு இடையூறையும் ஏற்படுத்தக்கூடும்.

2022 டிசம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் கனமழையும்,  90 கி.மீ வேகத்தில் காற்றும் வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே சாலை பாதுகாப்பு மற்றும் உயிரிழப்பைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973ன் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கு போதுமான காரணங்கள் இருக்கிறது.

எனவே, மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட ஆட்சியர்  முகமது மன்சூர்  குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973-ன் பிரிவு 144 ன் விதிகளின் கீழ் அவருக்கு  வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, மனித உயிருக்கு ஏதேனும் காயம், ஆபத்தைத் தடுக்கும் பொருட்டு, காரைக்கால் மாவட்டத்தில் சாலையோரத்தில் பேனர்கள்,போர்டுக்கள்,  ஃப்ளக்ஸ் போர்டுகள், கட்-அவுட்கள்,  விளம்பரக் கம்பங்கள் போன்றவற்றை அமைக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறையினர், அந்தந்த அதிகார வரம்பில் உள்ள அங்கீகரிக்கப்படாத/சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பதாகைகள் அல்லது விளம்பரக் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும்,  எந்த ஒரு தனி நபர்,சங்கம், அமைப்புகள்,அரசியல் கட்சிகள்  எந்த ஒரு சந்தர்ப்பத்திற்காகவும் எந்த வகையான பேனர்களையும் கட்டக்கூடாது.

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறையினர் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து இது போன்றவை  அமைப்பதைத் தடுக்க வேண்டும். இதனை மீறுகிறவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்ட (1973) பிரிவு 144 (2)  சட்ட விதிகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்"  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in