வணிக நிறுவனங்களை குறிவைத்து லட்சக்கணக்கில் வசூல்: அரசு அதிகாரிபோல் நடித்தவர்கள் சிக்கினர்

வணிக நிறுவனங்களை குறிவைத்து லட்சக்கணக்கில் வசூல்: அரசு அதிகாரிபோல் நடித்தவர்கள் சிக்கினர்

சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் போல் நடித்து வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக கூறி அபராதம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோயில் தெருவில் மிட்டல் லால் என்பவர் வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று அவரது கடைக்கு வந்த இரண்டு நபர்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் சுகாதாரத் துறை பிரிவில் பணிபுரியும் அதிகாரிகள் என தங்களை அறிமுகம் செய்து கொண்டதுடன் கடையில் சோதனை நடத்துவதற்காக வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் கடையில் தமிழக அரசு தடை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனைக்கு உள்ளதாக குறிப்பிட்ட இருவரும், அதற்கான அபராதமாக 30 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

ஆனால், அபராத தொகைக்கான ரசீது எதுவும் அவர்களிடம் கையில் இல்லாத நிலையில் சந்தேகம் அடைந்த வியாபாரி மிட்டல் லால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க எஸ்பிளனேடு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வியாசர்பாடியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும் இருவரும் மாநகராட்சியில் பணிபுரியவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தியதில் மாநகராட்சி சுகாதாரத்துறையில் சாந்தகுமாரி என்ற பெண் தலைவராக உள்ளது போல், ஒரு விசிட்டிங் கார்டை தயார் செய்து அதை வைத்து வணிக நிறுவனங்களில் காண்பித்து சோதனை நடத்துவது போல் நடித்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்காக அபராதம் விதிப்பதாக பணம் வசூல் செய்தது தெரியவந்தது.

பிடிபட்ட இருவரும் பாரிமுனை, மண்ணடி, கொத்தவால் சாவடி, சவுகார்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 4 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இருவரையும் கைது செய்த எஸ்பிளனேடு போலீஸார் விசிட்டிங் கார்டில் குறிப்பிடப்பட்ட சாந்தகுமாரி என்ற பெயரில் யாரேனும் இதன் பின்னணியில் உள்ளனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in