
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிக்கடி விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்களை உடனடியாக மெயிலில் அனுப்ப வேண்டும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி ஒரு உத்தரவை அனுப்பியுள்ளார்.
அதில்," தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விடுப்பு சார்ந்து கீழ்காணும் விவரங்களை சேகரித்து அனுப்ப வேண்டும். நீண்ட கால விடுப்பில் உள்ளவர்கள், நீண்ட காலமாக தகவலன்றி பணிக்கு வராதவர்கள், தொடர்ந்து விடுப்பில் உள்ளவர்கள் (அடிக்கடி விடுப்பில் உள்ளவர்கள்). மேற்காணும் விவரங்களை மிகவும் அவசரம் என கருதி மெயில் மூலம் உடனே அனுப்பி வைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
அடிக்கடி விடுப்பு எடுப்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க கல்வித்துறை தயாராகி வருவதாக ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.