குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவு ஆதாரங்களை சேகரிக்கவும்: கோகுல்ராஜ் வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவு ஆதாரங்களை சேகரிக்கவும்: கோகுல்ராஜ் வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

குற்ற வழக்குகளில், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டனர். மேலும், மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். இந்த வாதங்களுக்கு பதிலளித்து அரசு தரப்பில், மின்னணு ஆதாரங்களை திரிக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தடயவியல் துறை நிபுணர்களை அழைத்து நீதிபதிகள் விளக்கங்களை கேட்டு தெரிந்தனர். இதையடுத்து, குற்ற வழக்குகளில் கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரிப்பது தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர். அந்த வழிகாட்டு விதிமுறைகளை தாக்கல் செய்தால் அதை இந்த வழக்கின் தீர்ப்புடன் சேர்ப்பதாக தெரிவித்த நீதிபதிகள், தற்போது கண்காணிப்பு கேமரா பதிவுகள் முக்கியமான ஆதாரங்களாக பயன்படுத்துவதால் இந்த நடைமுறைகள், குற்ற வழக்குகளில் தீர்வு காண உதவியாக இருக்கும் என்றனர்.

பின்னர், காவல்துறை மற்றும் கோகுராஜ் தாயார் தரப்புகளின் எதிர் வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை பிப்ரவரி 23-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in