60 லட்சம் கடன் பெற்று நண்பர்களை ஏமாற்றிய சக ஊழியர்: மிரட்டும் லோன் ஆப் நிறுவனம்

60 லட்சம் கடன் பெற்று நண்பர்களை ஏமாற்றிய சக ஊழியர்: மிரட்டும் லோன் ஆப் நிறுவனம்

கடனை கட்டச்சொல்லி லோன் ஆப் நிறுவனங்கள் தங்களை மிரட்டுவதால் கடனை பெற்று தலைமறைவான சக ஊழியர் மீது பாதிக்கப்பட்ட பிரதிநிதிகள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த மருந்து விற்பனை செய்யும் பிரதிநிதிகள் 20க்கும் மேற்பட்டோர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாக பழகி வந்தோம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் பாதிக்கப்பட்ட எங்களிடம் வெவ்வேறு கதையை சொல்லி லட்சக்கணக்கில் பணம் கடனாக கேட்டார். அதில் குறிப்பாக பெற்றோருக்கு மருத்துவச் செலவுக்கு அவசரமாக பணம் தேவை. நிலத்தை விற்பனை செய்து வந்த பணம் வருமானவரி பிரச்சினை காரணமாக வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் மாட்டிக் கொண்டதாக நாடகமாடி ஒவ்வொருவரிடமும் ஒரு லட்சம் முதல் ஏழு லட்சம் வரை கடன் வாங்கி மோசடி செய்தார்.

மேலும் ராஜேஷ் தன்னுடன் பழகிய மருந்து விற்பனை பிரதிநிதிகளை மட்டும் குறி வைத்து இதுபோன்று கடன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளார். ராஜேஷ் பிரபலமான தனியார் மருந்து நிறுவனத்தில் மாதம் 70 ஆயிரம் சம்பளம் வாங்குவதை நம்பி, மருத்துவம் மற்றும் அவசர தேவைக்காக அவர் பணம் கேட்கும் போதெல்லாம் உதவினோம். கடன் கேட்கும் போது கையில் பணம் இல்லையென்றால், தனியார் ஆன்லைன் கடன் செயலி மூலம் தங்கள் செல்போனை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கடன் வாங்கி, தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டார். வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விடுவதாக வாக்குறுதி அளித்ததால் அதனை நம்பி தாங்கள் ஆன்லைன் கடன் செயலியை டவுன்லோடு செய்து தங்களது ஆவணங்களை கொடுத்து பணம் பெற்று கொண்டு மோசடி செய்து ஏமாற்றிவிட்டார்.

இவ்வாறு 30க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி விட்டு தங்கள் ஆவணங்களை பயன்படுத்தி கடன் செயலி மூலம் வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய தவணையை கூட காட்டாமல் தலைமறைவாகி விட்டார். இது குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்த போது ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ராஜேஷ் பணத்தை இழந்துவிட்டார். ராஜேஷை என்ன வேணுமானும் செய்து கொள்ளுங்கள் என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தோம்.

ஆன்லைன் செயலியில் ராஜேஷ் வாங்கிய கடனுக்கு அதிக வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டதுடன், சிலர் கடனை செலுத்த முடியாத சூழ்நிலையில், அந்த தனியார் கடன் செயலி நிறுவனம் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து தங்களது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்ப நேரிடும் என எச்சரிக்கின்றனர். எனவே ராஜேஷ் மீது நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in