
இணைய வழியில் அதிகம் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி ஒருவரிடம் 11 லட்சம் ரூபாயை அபகரித்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை கோவை போலீஸார் முடக்கி அதிரடி காட்டியுள்ளனர்.
கோவை அரசூர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்காரம். இவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் தேடியதில் ஒரு நிறுவனம் அனுப்பிய டெலிகிராம் ஐ.டி மூலமாக வந்த ஒரு லிங்கினுள் சென்று பணியில் இணைந்தார். சிறிய டாஸ்க் செய்து கொடுத்து அதன் மூலம் சிறு தொகையை லாபமாக பெற்றுள்ளார்.
அதனால் இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்து டாஸ்கில் செலுத்துவதற்காக 13 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.10,90,690 பணம் செலுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அந்த நிறுவனம் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை. அவரது பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.
இதனால் தவறான வழிகாட்டுதலில் தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை உணர்ந்த சிங்காரம், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனிடம் இது குறித்து புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் இதன் பேரில் நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் தொடர்புடைய வங்கி கணக்குகளைக் கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீஸார், அவற்றில் இருந்த ரூ.43,99,711 பணத்தை முடக்கம் செய்துள்ளனர்.
சிங்காரத்தின் பணம் ரூ.10,90,690 மீட்கவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் கூறுகையில், "பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும். சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களைத் தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள்" என்றார்.