
கோவையில் 9 ஆயிரம் கோடி செலவில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்ட பணிகள் குறித்த ஆய்வறிக்கை இம்மாதம் 15-ம் தேதி அரசிடம் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தெரிவித்தார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக், "கோவையில் 5 இடங்களை மையமாக வைத்து மெட்ரோ பணிகள் நடக்க உள்ளன. அவினாசி சாலை கணியூர் வரையில்தான் முதல் கட்டமாக இந்த திட்டம் கொண்டு வரப்படும். அவினாசி சாலை, திருச்சி சாலை வழியாக மெட்ரோ பாதை, சத்தி சாலை, சிறுவாணி சாலை வழியாக மெட்ரோ பாதை , மேட்டுப்பாளையம் சாலைகள் வழியாக மெட்ரோ பாதைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 139 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதில் 32 ரயில் நிலையங்கள் இடம்பெறும். முதல் கட்டமாக சத்தி சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலான 39 கி.மீ தூரம் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான திட்ட அறிக்கை வரும் 15-ம் தேதி அரசிடம் அளிக்கப்பட உள்ளது. மெட்ரோ திட்டம் தொடங்கப்பட்ட மூன்றரை ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும்’’ என அவர் தெரிவித்தார்.