மோசடியில் ஈடுபடும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை: கோவை ஆட்சியர் எச்சரிக்கை

மாவட்ட ஆட்சியர் சமீரன்
மாவட்ட ஆட்சியர் சமீரன்

பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், `பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் தங்களுக்கு உயர் அலுவலர்களை  தெரியும் எனவும், அவர்களிடம் கூறி உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக மக்கள் குறைதீர்க்கும் நாள்  கூட்டங்களில் மனுக்கள் வரப்பெற்றுள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு  மட்டுமல்லாமல் காவல்துறை மூலமாக வழக்கும் பதிவு செய்யப்படும்.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் ஒரு சில நபர்கள் போலியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றி மோசடிகளில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. அந்த நபர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பணியில் உள்ள அலுவலர்களிடம் அவர்களது பணிக்கு இடையூறு தரும் வகையில் பிறரின் கோரிக்கை மனுக்களை பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிபாரிசு  செய்யும் நபர்கள் குறித்து உடனடியாக  மாவட்ட ஆட்சியருக்கு  தகவல் தெரிவிக்க வேண்டும் என்று  அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும்  நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 9498042423 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகுந்த ஆதாரங்களுடன் புகார் அனுப்பினால் அந்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர்கள் குறித்து இப்படி வெளிப்படையாக ஒரு எச்சரிக்கை விடுக்கப்படும் அளவுக்கு  கோவை மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்கள் செயல்பட்டு வருவது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in