
கோவை உக்கடம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளைப் பிடித்த மாநகராட்சி அதிகாரிகள் உரிமையாளர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம், டவுன்ஹால், கெம்பட்டிகாலனி, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை, குனியமுத்தூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடு, ஆடு, குதிரை போன்ற கால்நடைகள் உரிமையாளர்களால் பராமரிக்கப் படாமல் சாலைகளில் சுற்றி திரிகின்றன. இதனால் இப்பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக இரவு நேரங்களில் தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் கால்நடைகள் சாலையின் நடுவே படுத்துக் கிடப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரப்பெற்றன. இதனையடுத்து கால்நடைகளை பிடிப்பதற்கு என ஹைட்ராலிக் பொருத்தப்பட்ட சிறப்பு வாகனம் ஒன்று மாநகராட்சி மேயரால் அண்மையில் துவக்கி வைக்கப்பட்டது.
அந்த சிறப்பு வாகனத்தைத் கொண்டு உக்கடம் மார்க்கெட் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் கால்நடைகளை பிடிக்கும் பணிகளை இன்று மேற்கொண்டனர். இதில் பொதுமக்களுக்கு தொந்தரவு மற்றும் இடையூறு ஏற்படுத்திய 3 மாடுகள் பிடிக்கப் பட்டன. இந்த மாடுகளைத் தேடி வந்த உரிமையாளர்களுக்கு ரூ.10 அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், " முதல் தடவை பிடிபட்ட மாட்டின் உரிமையாளர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி மாட்டைப் பிடித்துச் செல்லலாம்.அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் பிடிபட்ட மாடுகள் மாநகராட்சி மூலம் ஏலம் விடப்பட்டு அத்தொகை மாநகராட்சி கருவூலத்தில் செலுத்தப்படும். மேலும் பிடிபட்ட மாடுகள் மீண்டும் தெருக்கள் மற்றும் சாலைகளில் சுற்றினால் மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று கூறினார்.