கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: முபினின் பெரியப்பா மகன் கைது?

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: முபினின் பெரியப்பா மகன் கைது?

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் இறந்து போன ஜமேஷா முபினின் பெரியப்பா மகன் அஃப்சர் கான் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் பகுதியில் மூன்று நாட்ளுக்கு முன்பு காரில் இருந்து சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கார் சிலிண்டர் வெடித்ததால் விபத்து ஏற்பட்டதா அல்லது தீவிரவாதச்செயல்கள் மூலம் இந்த சம்பவம் நடந்ததா என போலீஸார் சந்தேகமடைந்தனர். இதையடுத்து விபத்து நடைபெற்ற இடத்தில் சோதனையிட்ட போது ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது காரில் இறந்தது ஜமேஷா முபின் என அடையாளம் தெரிய வந்தது.

இதையடுத்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிபொருட்களுக்குத் தேவையான பொட்டாட்சியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் 5 பேரை உபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று முதல் விசாரணையைத் தொடக்கியுள்ளது. முபினுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபினின் பெரியப்பா மகன் அஃப்சர்கான் என்பவரது வீட்டில் சிறப்பு புலனாய்வு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அவரிடமிருந்து கணினி மற்றும் அவர் பயன்படுத்திய கார் அனைத்தும் சோதனை செய்யப்பட்டது. பின்னர் அஃப்சர் கானை 2 நாட்கள் விசாரணைக்குப் பின் போலீஸார் விடுவிடுத்தனர்.

இந்த நிலையில் மீண்டும் அஃப்சர்கானை போலீஸார் நேற்று காலையில் அழைத்துச் சென்றனர். அவரை இரவு போலீஸார் கைது செய்துள்ளதாக தற்போது வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in