கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: வதந்தி பரப்பிய கிஷோர் கே.சுவாமி மீது வழக்கு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்: வதந்தி பரப்பிய கிஷோர் கே.சுவாமி மீது வழக்கு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியதாக யூடியூப்பர் கிஷோர் கே.சுவாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கோவையில் அக். 23-ம் தேதி அதிகாலையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸார் இச்சம்பவம் தொடர்பாக அதிரடி சோதனையை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட யூடியூப்பர் கிஷோர் கே.சுவாமி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமைதியைக் குலைக்கும் வகையில் வதந்தி பரப்பியதாக அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக ஏற்கெனவே யூடியூப்பர் கிஷோர் கே.சுவாமி மீது கடந்த ஆண்டு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. நடிகை ரோகிணி, பெண் பத்திரிகையாளர்கள் உள்பட பலர் இவர் மீது புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கிஷோர் கே.சுவாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதை எதிர்த்து அவர் தொடுத்த வழக்கின் கீழ் குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in