கோவை கார் குண்டுவெடிப்பு எதிரொலி: சென்னையில் 4 இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை

கோப்பு படம்
கோப்பு படம்

சென்னையில் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக 4 இடங்களில் சென்னை போலீஸார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு போன்றவற்றை வழங்கி, பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியிருந்தது. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்திருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக ஏற்கெனவே கடந்த 14-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக, பட்டியலில் உள்ள 4 பேரின் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு 120 முக்கிய ஆவணங்கள், இந்திய பணம் 10 லட்சம், வெளிநாடு கரன்சி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் சென்னை மாநகர போலீஸார் திடீரென அதே போன்றதொரு சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை ஓட்டேரி எஸ்.எஸ் புரத்தில் சாகுல் ஹமீது என்பவரது வீடு, வேப்பேரி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.எம் புஹாரி என்பவரது வீடுகளில் சென்னை மாநகர போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஏழு கிணறு, பிடாரியார் கோயில் தெருவில் உள்ள உமர் முக்தார் மற்றும் வி.வி.எம் தெருவில் உள்ள முகமது ஈசாக் கவுத் ஆகியோரது வீடுகளிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. தீவிரவாத இயக்கங்களுடன் இவர்கள் தொடர்பில் உள்ளனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக சென்னை போலீஸார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in