கோவை கார் வெடிப்பு சம்பவம்; சத்தியமங்கலம் காட்டில் குற்றவாளிகளை விசாரிக்க முடிவு: அதிரவைக்கும் பின்னணி

கோவை கார் வெடிப்பு சம்பவம்; சத்தியமங்கலம் காட்டில்  குற்றவாளிகளை விசாரிக்க முடிவு: அதிரவைக்கும் பின்னணி

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை சத்தியமங்கலம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இதனோடு தொடர்புடைய மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரை ஓட்டிவந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (28) என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு (என்ஐஏ) போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் முகமதுஅசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமதுநவாஸ் இஸ்மாயில், முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனா்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு உயிரிழந்த ஜமேசா முபின், சந்தனக் கடத்தல் வீரப்பன் பதுங்கி இருந்த சத்தியமங்கலம் காடுகளில் பல முறை ரகசிய கூட்டங்கள் நடத்தியது தெரியவந்தது. இந்த ரகசிய கூட்டங்களில் உயிரிழந்த ஜமேஷா முபின் மூன்று முறை கலந்துகொண்டதும், கார் வெடிப்பு தொடர்பாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியதும் தெரியவந்தது.

சத்தியமங்கலம் காடுகளில் நடத்தப்பட்ட ரகசிய கூட்டத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுடன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முகமதுஅசாருதீன், முகமதுதல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டது தெரியவந்தது. அதைதொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் உக்கடம் கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் கைதான 6 பேரையும் வருகிற 17-ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் முகமது அசாருதீன், முகமது தல்கா, அப்சர்கான், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்ஐஏ தலைமை அலுவலகத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையில், சத்தியமங்கலம் காடுகளில் நடத்தப்பட்ட ரகசிய கூட்டத்தில் மேலும் யாரெல்லாம் பங்கேற்றனர்? அவர்கள் பின்னணி என்ன? ரகசிய கூட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து பயங்கரவாதிகள் யாரேனும் கலந்து கொண்டார்களா? ரகசிய கூட்டத்தில் ஜமேஷாமுபின் என்ன ஆலோசனைகள் வழங்கினார். ரகசிய கூட்டம் நடத்த சத்தியமங்கலம் காடுகளைத் தேர்வு செய்ய காரணம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்து என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் 6 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் 6 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்தும், சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். விசாரணை முடிவில் இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in