கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் மூன்று பேர் கைது

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் மூன்று பேர் கைது

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அக். 23-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முபினுடன் தொடர்பில் இருந்ததாக முகமது அசாருதீன், அஃப்சர் கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், ஃபெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த அக்.27-ம் தேதி இவ்வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் பூந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதுவரை என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜமேஷா முபின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பிடம் எடுத்துக்கொண்ட உறுதிமொழியின்படி தற்கொலை தாக்குதல் நடத்தி, மதவழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்தவும், அதன் மூலம் மதப் பிரச்சினைக்கு வழிவகுக்கவும் திட்டமிட்டு தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

கோவை கார் வெடிகுண்டு விபத்து சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் இருந்து தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் தயார் செய்து தமிழகத்திற்கு அனுப்பியது. இதில் சென்னையைச் சேர்ந்த 18 பேர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது.

அதன் தொடர்ச்சியாக நவ. 10-ம் தேதி தமிழகத்தின் சென்னை, கோவை, திருவள்ளூர், திருப்பூர், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நாகை என 8 மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் உள்ள பாலக்காடு பகுதியில் ஒரு இடம் என மொத்தம் 43 இடங்களில் கோவை கார் வெடிகுண்டு விபத்து வழக்கு தொடர்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்குச் சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக கோவை கார் வெடிகுண்டு விபத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பலரிடம் கைமாறி இருப்பது தெரியவந்த நிலையில், காரை பயன்படுத்திய நபர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக கார் விற்பனையில் ஈடுபட்ட சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த நிஜாமுதீனை பிடித்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடமிருந்து பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்புடைய முகமது தாரிக், உமர் ஃபரூர் மற்றும் ஃபெரோஸ் கான் ஆகிய மேலும் 3 பேரை கோவையில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், விசாரணைக்குப் பின்பே குண்டு வெடிப்பு சதித்திட்டத்தில் இவர்களது பங்கு என்ன என்பது குறித்தும், இன்னும் எத்தனை பேர் இந்த சதித்திட்டத்தில் பங்கேற்றுள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in