இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை கடலில் வீசிய கடத்தல்காரர்கள்: தேடும் பணி தீவிரம்

கடத்தி வரப்பட்ட  தங்கக்கட்டிகள் (பழைய படம்)
கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டிகள் (பழைய படம்) இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை கடலில் வீசிய கடத்தல்காரர்கள்: தேடும் பணி தீவிரம்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட மேலும் பல கிலோ தங்கக் கட்டிகளை மீட்கும் முயற்சியில் இந்திய கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக கடலோர பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், கடல் அட்டை போன்ற தடைசெய்யப்பட்ட கடல்வாழ் உயிரினங்களும் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதே போல் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து இந்திய கடலோரக் காவல் படையினரின் உதவியுடன் நேற்று இரவு மண்டபம் தெற்கு கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அப்பகுதியில் தென்பட்ட படகு ஒன்றினை பிடித்து விசாரித்தனர். அப்போது படகில் வந்தவர்கள் கடத்தல் தங்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மண்டபம் வேதாளை பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்த வருவாய் புலனாய்வு துறையினர் அவர்களிடம் இருந்து 3 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் சில கிலோ தங்கக் கட்டிகளுடன் மேலும் மூவர் வேறு படகில் வருவதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியிலேயே முகாமிட்டு இருந்த வருவாய் புலனாய்வு துறை மற்றும் கடலோரக் காவல் படையினர் சிறிது நேரத்தில் அப்பகுதியில் வந்த படகினை மடக்கிப் பிடித்தனர்.

அந்த படகில் இருந்த வேதாளையைச் சேர்ந்த முகம்மது நாசர், அப்துல் ஹமீது மற்றும் பாம்பனைச் சேர்ந்த ரவி ஆகியோரைப் பிடித்து விசாரித்ததில் தாங்கள் கொண்டு வந்த கடத்தல் தங்கத்தை கடலில் வீசிவிட்டதாக கூறினர். இதையடுத்து பிடிபட்ட கடத்தல்காரர்கள் மற்றும் அவர்களது படகுகளை மண்டபம் கடலோரக் காவல் படை முகாமிற்கு கொண்டு வந்தனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே கடத்தல்காரர்கள் கடலில் வீசிய தங்கத்தை மீட்கும் முயற்சியில் இந்திய கடலோரக் காவல் படையினர் இன்று காலை முதல் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும், இன்று மாலை வரை தங்கம் எதுவும் மீட்கப்படாத நிலையில் தொடர்ந்து அதனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in