
பெரியாரியச் சிந்தனையாளரும் திராவிட இயக்க எழுத்தாளருமான பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் மறைவுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
’பேராசிரியர் திரு.மங்கள முருகேசன் அவர்கள் சுயமரியாதைச் சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களைத் தமிழ்கூறும் நல்லுலகிற்குப் படைத்தளித்த பெருந்தகை.
’தொண்டில் உயர்ந்த தூயவர் ஈவெரா மணியம்மையார்’ என்ற இவரது வரலாற்று நூல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பரிசு வழங்கப்பட்ட பெருமைக்குரியது. அத்துடன் சூழலியல் குறித்து இவர் எழுதிய ’சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ என்ற நூலுக்கும் தமிழ்நாடு அரசு பரிசு வழங்கிச் சிறப்பித்துள்ளது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வழியில் மாறாது நின்று அவர்களது கொள்கைகளை எந்நாளும் பிரதிபலித்தவர் பேராசிரியர் மங்கள முருகேசன்.
தனது நுண்மாண் நுழைபுலம் செறிந்த உரைகள் மூலம் கல்லூரி மாணவர்களிடையே பேரொளியைப் பரவசெய்த, தலைசிறந்த கல்வியாளர் பேராசிரியர் மங்கள முருகேசனின் மறைவு திராவிட இயக்க அறிவுலகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் திராவிட சிந்தனையர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.