மாணவன் மீது ஏறி இறங்கிய தண்ணீர் லாரி: தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்த சோகம்

மாணவன் மீது ஏறி இறங்கிய தண்ணீர் லாரி: தந்தையின் கண்முன்னே மகன் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடியில் இன்று காலையில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது 7-ம் வகுப்பு மாணவன் தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் அஜய்(12) தனியார் பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்புப் படித்துவந்தார். அஜய் வழக்கமாகத் தன் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலையிலும் கிளம்பிச் சென்றார். இன்று காலையில் தாளமுத்து நகரை அடுத்த ராஜபாளையம் பகுதியில் சென்றபோது மகேஷ், முன்னாள் சென்ற தண்ணீர் லாரியை முந்திச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாகத் தண்ணீர் லாரி மகேஷின் டூவீலரில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்த அஜய் கீழே விழுந்தார். அப்போது அஜய்யின் மீது தண்ணீர் லாரி ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அஜய்யை அக்கம், பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் அஜய் உயிர் இழந்தார். தந்தையின் கண்முன்னே சாலைவிபத்தில் மகன் உயிர் இழந்த சம்பவம் தூத்துக்குடி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தண்ணீர் லாரி டிரைவரையும் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in