6 பேருக்கு உறுப்புதானம் செய்து உயிர்விட்ட சிறுவன்; பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் பார்த்து கேரள மாநிலம் கண்ணீர்!

சாரங் - கண்கலங்கிய அமைச்சர் சிவன்குட்டி
சாரங் - கண்கலங்கிய அமைச்சர் சிவன்குட்டி

மூளைச்சாவு காரணமாக 6 பேரின் மறுவாழ்வுக்கு தனது உடல் உள்ளுறுப்புகளை தானம் செய்த சிறுவன், இறப்புக்கு பின்னர் வெளியான பத்தாம் வகுப்பு மதிப்பெண் பார்த்து கேரள மாநிலமே கண்ணீர் வடிக்கிறது.

கேரளாவின் ஆட்டிங்கல் பகுதியை சேர்ந்த சிறுவன் சாரங். அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய இவர், தேர்வு முடிவு வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன்னர் சாலை விபத்தில் தலையில் படுகாயமுற்றார். தீவிர மருத்துவ சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து சாரங்கின், கண்கள்(கார்னியா), கல்லீரல், இதய வால்வுகள், 2 சிறுநீரகங்கள் ஆகிய உள்ளுறுப்புகளை, அவை அவசிப்படும் நோயாளிகளுக்கு வழங்க சாரங்கின் பெற்றோர் முன்வந்தனர்.

இதன் மூலம் 6 நபர்களின் மறுவாழ்வுக்கு சாரங் உதவியதன் மூலம், மரணத்துக்குப் பின்னரும் பெருவாழ்வு பெற்றிருக்கிறார். இந்த சிறுவன் சாரங்கின் விபத்து முதல் மூளைச்சாவு மற்றும் உறுப்பு தானம் வரையிலான சம்பவங்கள் கேரள மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாவதற்கு 2 தினங்கள் முன்பாக சாரங் முழுமையான மரணத்தை தழுவினார். அதன் பின்னர் வெளியான தேர்வு முடிவுகளில் சாரங் பெற்ற மதிப்பெண்கள், அச்சிறுவன் மீதான கேரள மக்களின் வேதனையை மேலும் கிளறிவிட்டிருக்கின்றன. தேர்வு முடிவுகளை அறிவித்த கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ பிளஸ்’ தகுதியுடன் உயர் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் சாரங் குறித்து அறிவிக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார்.

உயிரோடு இருக்கும்போதே வெளிப்பட்ட சிறுவன் சாரங்கின் உதவும் குணம், கால்பந்து ஆர்வம், படிப்பில் முதன்மை ஆகியவற்றோடு, சாரங்கின் உறுப்புதானத்தையும் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். 16 வயது சிறுவன் கேரள மாநிலத்தில், 6 நபர்களின் மறுவாழ்வுக்கு உதவியிருப்பதோடு, உறுப்புதானம் குறித்தான விழிப்புணர்வை பரவலாக்கி சென்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in